
ஸ்டாக்ஹோம் – நோபல் பரிசுகளின் வரிசையில் இன்று திங்கட்கிழமை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பொருளாதார மேதை டாக்டர் எச்.தாலர் (Richard H. Thaler) இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறுகிறார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெறக்கூடியவர்கள் என ஆரூடம் கூறப்பட்டவர்களின் வரிசையில் இந்திய மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க்) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தனிமனிதனின் பழக்க வழக்கங்களும், குணாதிசயங்களும், அவன் எடுக்கும் முடிவுகளும் எவ்வாறு கட்டம் கட்டமாக ஒட்டுமொத்த பொருளாதார சந்தையையே மாற்றியமைக்கின்றன என்பது குறித்து 72 வயதான தாலர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
