கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் பெயரால் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடைபெற்றிருப்பது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை சபா மாநிலத்தின் வாரிசான் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரையும், அம்னோவின் இரண்டு உயர்மட்டத் தலைவர்களையும் கைது செய்தது.
வாரிசான் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் முகமட் அசிஸ் ஜம்மான், அம்னோ இளைஞர் பகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் ஜமாவி ஜபார், தாவாவ் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் அரிபின் காசிம் ஆகியோரே கைது செய்யப்பட்ட மூவராவர்.
ஜமாவி தெனோம் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவருமாவார். அவரும் மற்றொரு அம்னோ தலைவரான முகமட் அசிஸ் ஆகிய இருவரும் கோத்தா கினபாலு ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அரிபின், தாவாவ் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜமாவி ஜபார் தற்போது தொடர்பு, பல்ஊடக அமைச்சின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு இவர் முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால் கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது அவரது உதவியாளர்களில் ஒருவராக இருந்தார் என்றும் அந்தக் காலகட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பில்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சபா வாரிசானின் உதவித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அந்தோணி கடந்த வியாழக்கிழமை இதே விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.