Home நாடு “நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – நஜிப்புக்கு மகாதீர் சவால்!

“நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – நஜிப்புக்கு மகாதீர் சவால்!

1035
0
SHARE
Ad

mahathir-tun-கோலாலம்பூர் – தான் பொய்ச் செய்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து தன்னுடன் நேருக்கு நேர், ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என சவால் விடுத்துள்ளார்.

தனது சொந்த வலைப் பதிவான ‘செ டெட்” (Chedet) என்ற தளத்தில் மகாதீர் இவ்வாறு நேற்று பதிவிட்டார்.

நஜிப் கூறியதாக மலேசியாகினி இணைய ஊடகம் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையின் ஒவ்வொரு அம்சத்தையும் தற்காத்தும், எதிர்வினைக் கருத்துகளையும் கொண்ட நீண்ட கட்டுரை ஒன்றை மகாதீர் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தான் பரப்ப விரும்பும் பொய்ச் செய்திகளை பதிப்பிக்க விரும்பும் எல்லா ஊடகங்களோடும் தொடர்பு கொண்டு ஒரு தலைவர் (மகாதீர் பெயரைக் குறிப்பிடாமல்) பேசிவருவதாக நஜிப் குற்றம் சாட்டியதாக மலேசியாகினி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.

தனது சொந்த அரசியல் இலாபத்துக்காக நாட்டைப் பற்றிய பொய்களை அந்தத் தலைவர் பரப்பி வருவதாகவும் நஜிப் கூறியிருந்தார்.

தான் கூறுபவை எந்தவிதத்தில் பொய்யானவை என்பதை நஜிப் நிரூபிக்க வேண்டும் எனச் சவால் விடுத்த மகாதீர் உள்ளூர் ஊடக உலகம், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், ஆதிக்கத்திலும் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றும் சாடியிருக்கிறார்.

“1எம்டிபி விவகாரம் குறித்தும், நஜிப்பின் 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றமும் விவாதிக்க முடியாது, அம்னோவும் விவாதிக்க முடியாது என்பதுதான் இன்றைய நிலைமை. வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசும்போது நானே தணிக்கை முறையை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?” என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“என் வாழ்நாள் முழுவதும் நான் வெளிநாட்டு ஊடகங்களிடம்  பேசி வந்திருக்கிறேன்” என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.

“அப்படியே நான் சொல்வது பொய் என்றால் வாருங்கள்! “மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற விவாதத்தை 3-வது முறையாக நடத்துவோம்” என்றும் மகாதீர் சவால் விட்டிருக்கிறார்.

‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ (Nothing to Hide) என்ற தலைப்பிலான விவாதங்களை இரண்டு முறை கடந்த காலங்களில் நடத்துவதற்கு நிர்ணயித்து, நேரடி பகிரங்க விவாதத்துக்கு வருமாறு நஜிப்புக்கு மகாதீர் சவால் விடுத்திருந்தார்.

எனினும் அந்த விவாதங்களில் நஜிப் கலந்து கொள்ள முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக விவாதம் வைப்போம் என மகாதீர் நஜிப்புக்கு சவால் விடுத்திருக்கிறார்.