ஜோர்ஜ் டவுன் – கடந்த இரண்டு நாட்களாக பெய்த புயல் காற்றுடன் கூடிய பெருமழையால் பெரும் பாதிப்பிற்குள்ளான பினாங்கு மாநிலத்திற்கு உதவும் வகையில் உடனடியாக இராணுவ உதவியை வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடிற்கு தாம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
பினாங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது. பத்தடி முதல் பதினைந்து அடிகள் வரை நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.
வெள்ள நிவாரண மையங்களில் மின் இணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இராணுவ உதவியை எங்களுக்கு உடனடியாக வழங்கி உதவக் கோரி தாம் உள்துறை அமைச்சரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தொடர்புக் கொண்டதாகவும் லிம் குவான் எங் தெரிவித்தார்.
-க.மு.ஆய்தன்