Home நாடு நம்பிக்கைக் கூட்டணிக்கு ‘நம்பிக்கை’ ஏற்படுத்தும் துன் மகாதீர்

நம்பிக்கைக் கூட்டணிக்கு ‘நம்பிக்கை’ ஏற்படுத்தும் துன் மகாதீர்

762
0
SHARE
Ad

mahathir-tun-கோலாலம்பூர் – முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தோற்றுவித்த பக்காத்தான் ராயாட் கூட்டணி அவர் சிறைக்குச் சென்றவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போகத் தொடங்கியது. 2013 பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணி போட்டியிட்டபோது, “அந்தப் பெயரைப் பாருங்கள். பக்காத்தான் என்பது ஒருவரோடு ஒருவர் கூட்டாக இணைந்து எதையோ செய்வது போல் இருக்கிறது. அரசியல் கூட்டணி போலத் தெரியவில்லை” என்று கிண்டலடித்தவர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்.

ஆனால் கால ஓட்டத்தில், அந்தக் கூட்டணி பக்காத்தான் ஹரப்பான் என்ற பெயரில் நம்பிக்கைக் கூட்டணியாக மாறும் என்றோ, அந்தக் கூட்டணிக்குத் தானே முன்னின்று தலைமையேற்று நடத்தும் நிலைமை வரும் என்றோ மகாதீரே கனவு கண்டிருக்க மாட்டார்.

ஆனால், இப்போதோ, அந்த நம்பிக்கைக் கூட்டணிக்கு தலைமையேற்று 14-வது பொதுத் தேர்தலை நோக்கி வழி நடத்திச் செல்வதோடு, அந்த நம்பிக்கைக் கூட்டணியை வலுப்படுத்தும் சக்தியாகவும் துன் மகாதீர் திகழ்கிறார்.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிம் சிறைக்குச் சென்றது முதல், 2015 ஆம் ஆண்டு பாஸ் கட்சி நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறியது வரை தொடர்ந்து நம்பிக்கை இழந்துக் காணப்பட்ட நம்பிக்கைக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள எதிர்கட்சித் தலைவர்கள் முன்னாள் பிரதமரும் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் வருகைக்குப் பின் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

அக்கூட்டணியை துன் மகாதீர் சிறப்பாக வலுப்படுத்திவருவதே அதற்குக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர் டாக்டர் பூன் வீங் கியோங் கருத்து தெரிவித்துள்ளார்.

துன் மகாதீர் “பெர்சத்து” கட்சியை உருவாக்கி நம்பிக்கைக் கூட்டணியில் இணையாமல் இருந்திருந்தால், பாஸ் இல்லாத நிலையில், எதிர்கட்சிக் கூட்டணி வலுவிழந்து ஆட்டம் கண்டுப் போயிருக்கும்.

நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை இழந்துக் காணப்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் பெர்சத்து கட்சியின் தோற்றமும் நம்பிக்கைக் கட்டணியில் அதன் இணைப்பும் மகாதீரின் தலைமையும் அவர்களுக்குத் தனி நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

92 வயதான மகாதீரின் அரசியல் சாணக்கியம் குறைந்தது மேலும் 5 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களின் ஆதரவை நம்பிக்கைக் கூட்டணிக்குப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாஸ் கட்சி விலகியதால் ஏற்பட்ட மலாய் வாக்குகள் இழப்பை பக்காத்தான் ஈடுகட்டியிருக்கிறது என்று கூறலாம்.

92 வயதிலும் நாட்டைச் சுற்றி வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மகாதீர் கடந்த சில நாட்களாக பினாங்குக்கு வருகை தந்து வெள்ளப் பாதிப்புகளையும் பார்வையிட்டிருக்கிறார்.

பிரதமர் நஜிப் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலைத் தள்ளிப்  போடுவதற்கு மகாதீரின் ஆளுமை மீது கொண்ட அச்சமே காரணமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

– மு.க.ஆய்தன்