ஜகார்த்தா -புகிஸ் இனம் குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, அடால்ப் ஹிட்லர் போல் இனவெறி கொண்டவர் என புகிஸ் தலைவரும், முன்னாள் இந்தோனிசிய சட்டத்துறை, மனித உரிமைகள் அமைச்சர் ஹமிட் அவாலுதின் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அந்தாரா செய்தி நிறுவனம் கூறுகையில், 92 வயதான மகாதீர், “முந்தைய – அதிகார நோயால்” பாதிக்கப்பட்டிருப்பதாக ஹமிட் குறிப்பிட்டிருக்கிறார்.
“அரசியல் தலைவர்கள் உண்மையில் இனவாதத்தை ஒழிக்க வேண்டும். ஆனால் மகாதீர் உண்மையில் ஒரு இனவெறி பிடித்தவர். ஆனால் அவர் தன்னை ஒரு தலைவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவருக்கும், ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை” என்று ஹமிட் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை, புகிஸ் இன கடற்கொள்ளையர் வழி வந்தவர் என்றும் அவர் சுலாவசிக்கு அனுப்பப்பட வேண்டியவர் என்றும் மகாதீர் விமர்சித்திருந்தார்.
மகாதீரின் இக்கருத்துக்கு சிலாங்கூர் சுல்தானும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்ததோடு, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் ஒரு இந்தோனிசியத் தலைவரும் பூகிஸ் இன மக்களை சிறுமைப்படுத்தியதற்காக மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், தனது கருத்து நஜிப்பை மட்டுமே குறிக்கும் என்றும் மாறாக பூகிஸ் இன மக்களைத் தான் சிறுமைப்படுத்தவில்லை என்றும் மகாதீர் விளக்கம் தந்திருக்கிறார்.