கோலாலம்பூர் – துன் மகாதீர் பிரதமராக இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு, மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தவர், மகாதீரின் மகன் டான்ஸ்ரீ மொக்சானி மகாதீர். தனது தந்தையின் செல்வாக்கினாலும், ஆதரவாலும் பல வணிக முதலீடுகளைச் சாதகமாகப் பெற்றவர் மொக்சானி என்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்தன.
இந்நிலையில் தற்போது மலேசியாவில் தனது வணிக நிறுவனங்களில் இருந்து மொக்சானி கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கி விலகி வருகிறார் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசாங்கத்திற்கும், மகாதீருக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், இனியும் அரசு சார்புடைய வணிகங்களில் ஈடுபடுவதற்கு தனக்கு போதிய ஆதரவு கிடைக்காது என மொக்சானி கருதியிருக்கலாம் என்றும் வணிக வட்டாரங்கள் கணிக்கின்றன.
முதல் கட்டமாக, கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சபுரா எனெர்ஜி பெர்ஹாட் என்ற பங்குச் சந்தையில் இருக்கும் நிறுவனத்தில் தான் கொண்டிருந்த 385 மில்லியன் பங்குகளை மொக்சானி விற்பனை செய்துள்ளார். ஒரு பங்கு 1 ரிங்கிட் 50 காசு விலையில் இந்தப் பங்குகளை விற்பனை செய்திருப்பதன் மூலம் ஏறத்தாழ 587 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை அவர் ஈட்டியுள்ளார்.
சபுரா நிறுவனம் பெட்ரோலியத் துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனமாகும்.
மற்ற சில நிறுவனங்களின் பங்குகளையும், சபுரா நிறுவனத்தில் தான் கொண்டிருக்கும் எஞ்சிய பங்குகளை விற்பனை செய்வதிலும் மொக்சானி மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். 10.1 சதவீதப் பங்குகளை மொக்சானி, சபுரா நிறுவனத்தில் கொண்டிருக்கிறார்.
கெஞ்சானா கேப்பிட்டல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மூலம் தனது முதலீடுகளை மொக்சானி கொண்டிருக்கிறார்.