கோலாலம்பூர் – தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகமான வாழும் டர்பனில் நாளை புதன்கிழமை நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் (படம்) கலந்து கொள்கிறார்.
பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்கா நாட்டின் டர்பன் நகரில் 4ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நாளை நவம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியா, கோலாலம்பூர், துபாய் போன்ற நாடுகளில் இந்த மாநாடு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. இம்முறை தென்னாப்பிரிக்காவில் 15.11.2017 தொடங்கி 19.11.2017 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், மொரிஷியஸ் போன்ற உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
தமிழர்களின் கலாச்சார, தொழில், வர்த்தக முதலீட்டை மேம்படுத்தவும், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியன மேலும் வளர்ச்சி அடையவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தவும் இம்மாநாடு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
முதலாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, சென்னையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதையடுத்து 2ஆவது மாநாடு 2011-இல் துபாயில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 3ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, சென்னையில் நடைபெற்றது.
உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்களில் சிறந்த தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் என பலரும் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் மற்ற இனக் குழுக்களைப் போல் தமிழர்கள் வளர்ச்சி பெறவில்லை. இதற்கு அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பின்மைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இனிவரும் காலங்களில் இந்தத் தொடர்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கான வழியை ஆராய்வதற்காக இம்மாநாட்டில் முதல் முறையாகக் கலந்து கொள்வதாக 6 லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவரும் போக்குவரத்து அமைச்சின் சிறப்பு ஆலோசகருமான டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்திருக்கிறார்.
டான்ஶ்ரீ கேவியசுடன் கவுன்சிலர் ரவி சந்திரன், ரவின் சுப்ரமணியம், பாலு ராமசாமி, பழனியப்பன் மாரப்பன் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இவர்களுடன் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம், அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன், மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனத் தலைவர் டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் ஆகியோரும் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்கின்றனர்.