Home இந்தியா இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்

946
0
SHARE
Ad

jeyaசென்னை , மார்ச் 26- இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர்குற்றங்கள் தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மக்களின் உணர்வுகள் குறித்து தங்களுக்கு ஏற்கனவே கடந்த 18ம் தேதியிட்ட கடிதத்தில் கூறியுள்ளேன்.

#TamilSchoolmychoice

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் இரண்டாம்தர மக்களாகவே இன்னும் நடத்தப்படுகிறார்கள். அங்கு இன்னும் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப் பட்டு வருகின்றன.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ஒரு உறுதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்தவர்களை வெளியே கொண்டு வர வேண்டும். அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல் அந்த தீர்மானத்தில் முக்கிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன்.

ஆனால், சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்த வலியுறுத்தாமல், நீர்த்துப்போன ஒரு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி விளைவித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 15 முதல் 17வரை இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இலங்கையில் இனப்படுகொலையும், போர் குற்றமும் செய்துள்ள குற்றவாளியான நாட்டில் சர்வதேச அளவிலான மாநாடு நடத்தப்படுவது அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது போலாகும். இந்த மாநாட்டை நாடுகள் புறக்கணிக்க வேண்டும்.

கொழும்புவில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதன்மூலம், அந்த நாட்டில் நடந்த இனப்படுகொலையை சர்வதேச அளவில் எடுத்துச்சொல்லி அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க பிரதமருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கை ராணுவத்தின் கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழ் மக்களுக்கு சமஉரிமையும் வாழ்வும் கிடைக்க வழி ஏற்படும். பல்வேறு நாடுகளும், ஜி 8 நாடுகளும் காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுக்க உள்ளன.  இந்தியா சார்பில் யாராவது இந்த மாநாட்டில் கலந்துகொண்டால் இலங்கை அரசுக்கு அது உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தூண்டிவிடும்.

எனவே, இந்த காமென்வெல்த் மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை, ஜனநாயக மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரசாரத்தை மேற்கொள்ள இந்தியா தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள நம்பிக்கையில்லாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை மூலம் இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து அவர்கள் மீது சிங்களர்கள் நடத்திய கொடுமைகளுக்கு ஆறுதல் அளிக்க முடியும்.

– இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.