Home வணிகம்/தொழில் நுட்பம் ஆண்டிராய்டு ஒரியோ தமிழுக்குக் கொண்டுவரும் சிறப்புகள்

ஆண்டிராய்டு ஒரியோ தமிழுக்குக் கொண்டுவரும் சிறப்புகள்

1228
0
SHARE
Ad

android-8.0-oreo-கூகுளின் அடுத்த ஆண்டிராய்டு பதிகை எண் 8.0.  இதற்கு ‘ஒரியோ’ எனும் இனிப்பின் பெயர் சுட்டப்பட்டுள்ளது. இது பலரும் அறிந்ததே. கூகுள் அண்மையில் வெளியிட்ட ‘பிக்சல்’ (Pixel) வகைத் திறன்பேசிகளே இந்தப் புதிய பதிகையில் இயங்கும் முதல் கருவிகள். சம்சாங், எச்.டி.சி முதலிய நிறுவனங்கள், அவை வெளியிடவிருக்கும் புதிய திறன்கருவிகளும் ஒரியோவில் தான் இயங்கும். இதில் ஐயமில்லை.

ஆண்டிராய்டு ஒரியோ பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்துவிட்டன. இந்தப் பதிகையில் உள்ள சிறப்புக் கூறுகளை விளக்கிப் பல செய்திகளும் பதிவுகளும் இருக்கின்றன. ஆனால், ஒரியோவில் குறிப்பாகத் தமிழுக்கென்றே சில முன்னேற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதைப் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மையில் நடந்து முடிந்த 41ஆவது யூனிகோடு மாநாட்டில் கூகுள் பொறியாளர்கள் சிலருடன் கலந்துரையாடியபோது இந்த விவரங்கள் கிடைத்தன. பல சேர்க்கைகள், செயலிகளை உருவாக்குபவர்களுக்கும், திறன்கருவிகளுக்கான இணைய பக்கங்களை உருவாக்குபவர்களுக்கும் உரியதாக இருக்கும். பொதுப் பயனர்களுக்கு உதவும் முதன்மையான சிலவற்றை மட்டும் இங்கே விளக்குகிறோம்.

சொல்லுக்கிடையில் சுட்டியை இடுதல்

#TamilSchoolmychoice

ஒரு சொல்லில் வரும் மெய்யெழுத்துக்கும் உயிர்மெய் எழுத்துக்கும் இடையில் சுட்டியை (cursor – கர்சர்) இடுவது இயலாத ஒன்றாக இதுவரை இருந்து வந்தது. இந்திய மொழிகள் பெரும்பாலும் ஒரு மெய்யெழுத்துக்குப்பின் வரும் உயிர்மெய்யெழுத்தை முதலில் உள்ள மெய்யோடு இணைத்துக் கூட்டெழுத்தாக மாற்றிவிடுகின்றன. எனவே, இவ்விரு எழுத்துகளுக்கிடையில் சுட்டியை (cursor) வைக்க இடம் கொடுப்பதில்லை. திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம்கூட இதற்கு விதிவிலக்கல்ல. தமிழில் கூட்டெழுத்து என்ற பயன்பாடு இல்லை. இந்திய மொழிகளுக்குள்ள பொதுவான விதியே தமிழுக்கும் இதுவரை விதிக்கப்பட்டது. இந்நிலை ஆண்டிராய்டு ஒரியோ பதிகையில் மாற்றப்பட்டுள்ளது. தமிழுக்குள்ள தனிச்சிறப்பை உணர்ந்தே இந்த மாற்றத்தைக் கூகுள் பொறியாளர்கள் செய்திருக்கிறார்கள்.

sellinam-android-orio-இதைப்போலவே, ஒரு சொல்லை பின்னால் இருந்து ஒவ்வோர் எழுத்தாக நீக்கும்போது, நீக்கப்படும் எழுத்துக்கு முன்னுள்ள மெய்யெழுத்தும் நீங்கும். இவை இரண்டும் ஒரு கூட்டெழுத்தைச் சேர்ந்தவை எனும் பிறமொழிக்குள்ள விதியே தமிழில் இந்த விளைவைத் தந்தது. இந்த நிலையும் ஒரியோவில் மாற்றம் கண்டுள்ளது. ஒரியோவில் ‘பட்ட’ என்று எழுதி, சுட்டியை ‘ட’ எழுத்துக்கு பின் வைத்து நீக்கம் செய்தால், ‘ட’ மட்டுமே நீங்கி ‘பட்’ என்று நிற்கும். முந்தைய பதிகைகளில் ‘ட’, ‘ட்’ இரண்டு எழுத்துகளுமே நீங்கும்.

சொல்லுடைப்பு

ஒரு பனுவலில் (text) உள்ள வரிகளை மடிக்கும்போது (line wrap), நீளமான சொற்களை உடைத்துப் பிற்பகுதியை அடுத்த வரிக்குக் கொண்டு செல்வது வழக்கமான ஒரு செயல். தமிழில் சொல்லுடைப்புக்கென்றே சில விதிகள் உள்ளன. பனுவலை வாசிக்கும்போது எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் வாசிப்பதற்கு இந்த விதிகள் உதவுகின்றன. இந்த விதிகள் அனைத்தையும் மின்னுட்பப் பயன்பாட்டிற்கு எளிதாக மாற்ற இயலாவிட்டாலும் ஒருசில விதிகளைக் கையாண்டாலுமே தமிழ்ப் பனுவல்கள் அழகாகப் படைக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். இதற்கேற்ப சில விதிகள் ஆண்டிராய்டு ஒரியோ பதிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

முந்தைய ஆண்டிராய்டு பதிகைகளுக்கும், ஒரியோ பதிகைக்கும் தமிழ் சொல்லுடைப்பில் என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க இன்னும் வாய்ப்பு அமையவில்லை.

தமிழ் அறிந்து செய்யப்படும் மேம்பாடுகள்

இந்த மேம்பாடுகளைத் தவிர வேறு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பயன்படுத்திப் பார்க்கும்போது ஒவ்வொன்றாகத் தெரியவரும். சிறுசிறு மேம்பாடுகள் என்றாலும் தமிழை முழுமையாக அறிந்து செய்யப்பட்ட மேம்பாடுகள் எனலாம். மின்னுட்பக் கருவிகளில் தமிழின் பயன்பாடு, இரண்டாம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு வரும்நாள் தொலைவில் இல்லை எனும் நம்பிக்கையை, இதுபோன்ற மேம்பாடுகள் நமக்குத் தருகின்றன. கூகுள் செய்திருப்பதைப் போலவே, ஆப்பிளும் மைக்குரோசாப்ட்டும் அந்தந்த இயங்குதளங்களில் விரைவில் செய்யும் என எதிர்பார்ப்போம்!

– நன்றி: செல்லினம்