கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் விஎக்ஸ் என்ற இரசாயனம் தேய்த்துக் கொல்லப்பட்ட போது, அவர் வைத்திருந்த பையில் 12 விஷமுறிவு அடங்கிய குப்பிகள் இருந்ததாக உயர்நீதிமன்றதில் கூறப்பட்டது.
அந்தக் குப்பிகளைச் சோதனை செய்த மது மற்றும் மருத்துவ நச்சுயியல் பிரிவு தலைவர் மருத்துவர் கே.ஷர்மிளா (வயது 38) இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த 12 குப்பிகளும் அட்ரோபைன் என்ற மருந்தால் நிரப்பப்பட்டிருந்ததாகவும், அவை பொதுவாக விஎக்ஸ் போன்ற போன்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இரசாயனங்களுக்கான மாற்று மருந்து என்றும் ஷர்மிளா தெரிவித்தார்.
“கடந்த மார்ச் 10-ம் தேதி, மாலை 4.06 மணியளவில், நச்சுயியல் சோதனைக்காக காவல்துறையிடமிருந்து எனக்கு அவை (விஷமுறிவு மருந்துகள்) மற்றும் மற்ற பொருட்களும் கிடைத்தன” என்று மருத்துவர் ஷர்மிளா நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் துணை அரசாங்க வழக்கறிஞர் முகமது ஃபைருஸ் ஜோஹாரியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.