Home நாடு இலங்கையில் 2 மாதங்கள் மனிதநேயப் பணிகள் – ஆர்ஜே தியாவுடன் நேர்காணல்!

இலங்கையில் 2 மாதங்கள் மனிதநேயப் பணிகள் – ஆர்ஜே தியாவுடன் நேர்காணல்!

1800
0
SHARE
Ad

Tya7கோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் மாதம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ், மைகார்ப்@சவுத்ஏசியா ஏற்பாட்டில் வங்காள தேசம் மற்றும் இலங்கையில் மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள மலேசியாவில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 40 மலேசியர்கள் சென்றனர்.

அவர்களில் 3 பேர் மட்டுமே மலேசிய இந்தியர்கள். அதிலும் ஒரே பெண் மட்டுமே. அவர் வேறுயாருமல்ல மின்னல் வானொலியில் கடந்த 3 ஆண்டுகளாக தனது கணீர் குரலால் நேயர்களைத் தன் வசப்படுத்தி வரும் சத்தியக் குமாரி. சுருக்கமாக தியா.

2 மாதங்கள் இலங்கையில், திரிகோமலி, அனுராதபுரம், பத்திகாலோ ஆகிய கிராமங்களில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு விட்டு இந்த மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மனிதநேயப்பணிகள் என்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் குடும்பத்தைப் பிரிந்து 2 மாதங்கள், வேறு ஒரு நாட்டில் சேவை செய்வது என்பதற்கு நிச்சயமாக ஒரு தியாகம் வேண்டும்.

அப்படியிருக்க தியாவின் இந்த 2 மாத கால அனுபவம் எப்படி இருந்தது? அவரிடம் செல்லியல் நடத்திய நேர்காணல் இதோ:

Tya10செல்லியல்: இந்த மனிதநேயப் பணிக்கு தேர்வானது எப்படி?

தியா: மனிதநேயப் பணிக்கு, அரசாங்கத்தின் அறிவிப்புகள் பார்த்து இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்தேன். அதில் உளவியல் ரீதியான பல கேள்விகளோடு, சுயவிபரம் உள்ளிட்டவைகள் கேட்கப்பட்டிருந்தன. மேலும், நம்மை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்று ஒரு காணொளியும் பதிவு செய்து அனுப்ப வேண்டும். அப்படி தான் விண்ணப்பம் செய்தேன்.

சபா, சரவாக் உட்பட நாடெங்கிலும் இருந்து 690 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அந்த 690 விண்ணப்பங்களில் சிலரைத் தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைந்திருந்தார்கள்.

ஜூலை மாதம் எங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. அந்த நேர்காணலில் 40 பேரைத் தேர்வு செய்தார்கள்.

அந்த 40 பேருக்கும் செராசில் அமைந்திருக்கும் அனைத்துலக இளைஞர் மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிறைய பயிற்சிகள் இருந்தன. அங்கே 1 வாரம். அதன் பின்னர் லுமுட்டில் எங்களுக்கு மலையேற்றம், கேம்பிங் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

செல்லியல்: உடல்ரீதியான, உளவியல் ரீதியான பயிற்சிகளை எப்படி சமாளித்தீர்கள்?

தியா: 2 மாத மனிதநேயப் பணிகளுக்கு, மனரீதியான தகுதியோடு, உடல் ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை அளிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி முதலுதவிச் சிகிச்சை முறைகளும் அளிக்கப்பட்டன. காரணம், வேறு ஒரு நாட்டிற்குச் செல்கிறோம். அப்படி இருக்கையில் நிச்சயமாக குழுவில் இருப்பவர்கள் அனைவருக்குமே ஒருவருக்கொருவர் உதவி செய்ய முதலுதவி போன்ற அடிப்படைச் சிகிச்சை முறைகள் மிக அவசியம் அல்லவா? அதனால் அவை எங்களுக்கு அளிக்கப்பட்டு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன. 3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

Tya9செல்லியல்: பயிற்சிகள் முடித்த பிறகு இலங்கைக்குத் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

தியா: அத்தனை பயிற்சிகளையும் நிறைவு செய்த பிறகு, தேர்வான எங்கள் 40 பேரையும், வங்காள தேசத்திற்கு 20 பேர், இலங்கைக்கு 20 பேர் என இரண்டு அணிகளாகப் பிரித்தனர்.

என்னை ஏன் இலங்கைக்குத் தேர்வு செய்தனர் என்றால், தமிழ் பேசுவதால் மொழிப் பிரச்சினை இருக்காது. எனது குழுவில் நான் மட்டுமே தமிழ்ப் பெண் என்பதால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணினார்கள்.

எங்கள் குழுவிற்கு அனுராதாபுரம் உள்ளிட்ட இடங்களைக் கொடுத்தார்கள். அங்கு செல்வதற்கு முன்பு கொழும்புவில் 3 வாரங்கள் தங்கியிருந்தோம். அங்குள்ள அகதி முகாம்களுக்குச் சென்று அங்கிருந்தவர்களுக்கு உதவிகள் செய்தோம். முஸ்லிம் உதவி அறக்கட்டளையுடன் இணைந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, ரோஹின்யா என பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அங்கிருந்தனர்.

Tya8அவர்களுக்கு பற்கள் பாதுகாப்பு முறைகள், டிங்கி விழிப்புணர்வு, தூய்மை உள்ளிட்ட விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தினோம். அதுமட்டுமின்றி அவர்களுக்கு ஆங்கில வகுப்புகளும் நடத்தினோம். குறிப்பாக, அங்கிருந்த ரோஹின்யா முஸ்லிம்களுக்கு அவர்களுடைய மொழியைப் பேச மட்டுமே தெரியும். அதனை எழுதக் கூட தெரியாது. எனவே அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது சற்று சவாலாக இருந்தது. அவர்களுக்கு பென்சிலைக் கையில் பிடிக்கக் கூடத் தெரியாது.

அப்படி இருக்கையில், அங்கிருந்த 38 ரோஹின்யா குடும்பங்களில் ஒருவருக்கு மட்டும் லேசாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆங்கிலம் தெரியும். அவர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததை பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்தவர். எனவே அவர் மூலமாக மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். மூன்று வாரம் அங்கு அவர்களுக்குப் பயிற்சி அளித்த பிறகு தான் அனுராதபுரம் சென்றோம்.

Tya3அனுராதபுரத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்று இருந்தது. மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனை முற்றிலுமாக மாற்றி மராமத்துப் பணிகளை மேற்கொண்டோம். அங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்களை வைத்து நாங்கள் அதனை மாற்றியமைத்தோம். பெயிண்ட் பூசுவது போன்ற பணிகளையெல்லாம் எங்களது குழுவே செய்து முடித்தோம்.

அதன் பின்னர், உயர்நிலைப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு விளையாட ஒழுங்கான ஒரு இடம் இல்லாமல் இருந்தது. முதலில் ஒரு கூடைப்பந்து மைதானம் அமைக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. பின்னர், ஒரு யோசனை வந்தது. அங்கிருந்த பயன்படுத்தப்படாத வகுப்பறை ஒன்றில், விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைத்து உள் விளையாட்டு அரங்கமாக மாற்றியமைத்தோம்.

Tya6செல்லியல்: அருமை.. இந்த 2 மாதங்கள் மனிதநேயப் பணியில் மறக்க முடியாத அனுபவம் எது?

Tya5தியா: மறக்க முடியாத அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் மிகவும் என்னை பாதித்தது, நாங்கள் தங்கியிருந்த கிராமத்தில் தமிழ்க் குடும்பம் ஒன்று இருந்தது. அக்குடும்பத்தின் தலைவி பெயர் பாமதி. அவர்கள் வீட்டில் ஒரு கிணறு இருந்தது. அது கடந்த 17 ஆண்டுகளாகப் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

தினமும் அவர்கள் 12 கிலோமீட்டர் நடந்து சென்று இரண்டு வாளியில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தார்கள். ஒரு குடும்பத்திற்குத் தேவையான தண்ணீரை எடுத்து வர வேண்டும் என்றால் எத்தனை முறை நடக்க வேண்டும்? என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.

Tya4நாங்கள் அந்தக் கிணற்றை முற்றிலுமாகப் புதுப்பித்து, மோட்டார் மூலம் அவர்களின் வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல் பல வசதிகளைச் செய்து கொடுத்தோம். இப்போது அவர்களுக்கு வீட்டிற்குள்ளேயே தண்ணீர் வருகின்றது. அவர்களின் வீட்டிற்குப் பின்னால் காய்கறியெல்லாம் நடுவது போல் சிறிய தோட்டம் ஒன்றும் இருக்கிறது. அதற்கும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்து கொடுத்தோம்.

அந்தக் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பாமதி என்பவர் கண்ணீர் விட்டபடி என்னிடம் பல முறை நன்றி தெரிவித்தார். நமக்கு அது சிறிய விசயமாகத் தெரிந்தாலும் அவர்களுக்கு அது ஒரு மிகப் பெரிய தீர்வாக இருந்தது. இனி அந்தக் குடும்பம் மட்டுமின்றி அவர்களுக்குப் பக்கத்தில் உள்ள சில குடும்பங்களுக்கும் அக்கிணறு மிகவும் உதவியாக இருக்கப் போகிறது. அந்தச் சம்பவம் என்னை மிகவும் கண்கலங்க வைத்தது.

Tyaசெல்லியல்: உங்களின் இந்த ஆர்வத்திற்கு மின்னல் எஃப்எம் ஆதரவு எப்படி இருந்தது?

தியா: மின்னல் எஃப்எம் எனக்கு மிகவும் ஆதரவு தந்தார்கள். நான் 3 மாதங்கள் அறிவிப்புப் பணியில் இல்லை. ஆனால் சக மின்னல் எஃப்எம் அறிவிப்பாளர்கள் தான் என்னுடைய இடத்தை நிரப்பினார்கள். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்த பிறகு முதலில் எனது அன்னையிடம் கூறுவதற்கு முன்னர் எனது பாஸ் குமரனிடம் தான் முதலில் சொன்னேன். நான் இதற்கு விண்ணப்பம் போடுவதற்கு முன்பே சொல்லியிருந்தேன். அவர் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஒரு அறிவிப்பாளர் 3 மாதங்கள் விடுப்பு எடுக்கிறார் என்றால் எந்த ஒரு நிர்வாகமும் தயங்குவார்கள். ஆனால் எனது பாஸ், ‘நல்ல விசயம் தானே செய்யுங்க’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். 3 மாதம் என்பது மிகவும் அதிகம். விடுப்பு கொடுக்க முடியாது என்று எனது பாஸ் சொல்லியிருந்தால் நிச்சயமாக என்னால் இதனைச் செய்திருக்க முடியாது. நான் இந்தப் பணிக்கு போனதற்கு முக்கியக் காரணம் எனது பாஸ் குமரன் தான். நான் அங்கு தன்னார்வப் பணிகளை மேற்கொண்டிருந்த போது நாங்கள் செய்து கொண்டிருந்த பல திட்டங்கள் குறித்து அவருக்கு புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் என்னை மேலும் ஊக்கப்படுத்தினார்.

செல்லியல்: தியாவுக்கு மனித நேயப் பணிகளில் எப்படி ஆர்வம் வந்தது?

தியா: எஸ்டிபிஎம் முடித்ததில் இருந்து எனக்கு சமூகப் பணிகளில் ஆர்வம் வந்தது. பத்துமலை தமிழ்ப்பள்ளியில், படிப்பில் மிகவும் பின்தங்கியிருந்த மாணவர்களுக்கு ஒரு 8 மாதங்கள் கற்றுக் கொடுத்தேன். அதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது  தன்னார்வப் பணிகளில் நிறைய ஈடுபட்டிருக்கிறேன். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் என நிறைய பேருக்கு தன்னார்வப் பணிகளைச் செய்திருக்கிறேன். அதன் பின்னர் வேலைக்கு வந்ததற்குப் பிறகு நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டிருக்கிறேன். இப்படி எனக்கு எப்போதுமே தன்னார்வப் பணிகளில் மிகவும் ஈடுபாடு இருந்து வருகின்றது. தொடர்ந்து இது போன்ற பணிகளின் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகின்றேன்.

தியாவின் இந்த ஆர்வமும், சேவை மனப்பான்மையும் மேலும் தொடர்ந்து பலருக்கு உதவியாக இருக்க செல்லியல் சார்பில் வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

-ஃபீனிக்ஸ்தாசன்