Home நாடு ஹிண்ட்ராப் குறிவைக்கும் மஇகா தொகுதிகள்!

ஹிண்ட்ராப் குறிவைக்கும் மஇகா தொகுதிகள்!

1292
0
SHARE
Ad

waythaகோலாலம்பூர் – மஇகாவை அடுத்த பொதுத் தேர்தலில் முற்றாகத் துடைத்தொழிப்போம் என சூளுரைத்திருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, பக்காத்தான் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளை மட்டும் தாங்கள் போட்டியிடக் கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி பார்த்தால் மஇகா கடந்த 2013 பொதுத் தேர்தலில் வென்ற நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட ஹிண்ட்ராப் குறிவைத்திருப்பதாக அந்த இயக்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

hindrafபொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்டம் கட்டமாக காய்களை நகர்த்தி, அரசியல் அரங்கில் தங்களுக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது – மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது – என்பதைக் காட்டும் வண்ணம் காட்சிகளை அரங்கேற்றி வருகிறது ஹிண்ட்ராப் இயக்கம்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்கு மும்முரம் காட்டி வரும் ஹிண்ட்ராப், மஇகாவுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்திருக்கின்றது.

அதில் முதல் கட்டமாக மஇகாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருக்கிறார் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி.

அதைத் தொடர்ந்து ஹிண்ட்ராப் மீது இந்தியர்கள் நம்பிக்கை வைக்கலாம் என பரிந்துரை செய்திருக்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம்.

Kengadharan-R -Hindraf
வழக்கறிஞர் ஆர்.கங்காதரன் – (படம்: நன்றி – பிரி மலேசியா டுடே)

இன்று புதன்கிழமை ‘மக்கள் ஓசை’ நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி வழக்கறிஞரும், ஹிண்ட்ராப் போராட்டவாதியும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவருமான ஆர்.கங்காதரன், பக்காத்தான் கூட்டணியில் ஹிண்ட்ராப் இணையும் என்றும் இரண்டு நாடாளுமன்றங்களையும், இரண்டு சட்டமன்றங்களையும் பக்காத்தான் தங்களுக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஹிண்ட்ராப் குறிவைக்கும் மஇகா தொகுதிகள்

MIC Logo 440 x 215ஹிண்ட்ராப் முன் வைக்கும் அரசியல் சித்தாந்தத்தின்படி, பக்காத்தான் தோல்வியுற்ற தொகுதிகளில் மட்டும் எங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என ஹிண்ட்ராப் கோரிக்கை வைத்திருக்கிறது.

அதன்படி பார்த்தால், மஇகா 2013 பொதுத் தேர்தலில் வென்று தக்க வைத்துக் கொண்ட நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் கேமரன் மலை, உலு சிலாங்கூர், தாப்பா, சிகாமாட் ஆகியவையாகும்.

எனவே, இந்த 4 நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறிவைத்திருக்கும் ஹிண்ட்ராப்புக்கு பக்காத்தான் கூட்டணி எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கும் என்பதைப் பொறுத்து, ஹிண்ட்ராப் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கும்.

எதிர்க்கட்சிகள் தொகுதிகளை விட்டுக் கொடுக்குமா?

pakatan harapan-logoஅதன்படி பார்த்தால் கடந்த முறை சிகாமாட், தாப்பா, உலு சிலாங்கூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பிகேஆர் கட்சியும், கேமரன் மலை தொகுதியில் ஜசெகவும், மஇகா வேட்பாளர்களை எதிர்த்துக் களமிறங்கின.

முதல் பிரச்சனை, இந்தத் தொகுதிகளை பிகேஆரும், ஜசெகவும் புதிதாக வந்து இணையும் ஹிண்ட்ராப்புக்கு விட்டுக் கொடுக்குமா என்பதுதான்!

மஇகா தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சிகாமாட் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் டத்தோ எட்மண்ட் சந்தாரா அந்தத் தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கூட தீபாவளி பொது விருந்துபசரிப்பு ஒன்றை சிகாமாட் தொகுதியில் நடத்தினார் எட்மண்ட் சந்தாரா.

pakatan-harapan_கேமரன் மலைத் தொகுதியில், ஜசெக சார்பாக 2013-இல் போட்டியிட்டுத் தோல்வி கண்ட வழக்கறிஞர் மனோகரன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கடந்த சில மாதங்களாக அந்தத் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

தாப்பா, உலு சிலாங்கூர் தொகுதிகளில் இதுவரையில் பிகேஆர் சார்பாக எந்த வேட்பாளரும் போட்டியிட அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

எனவே, முதல் கட்டமாக பக்காத்தான் ஹரப்பான் ஹிண்ட்ராப்பை தங்களின் கூட்டணியில் இணைத்துக் கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் ஹிண்ட்ராப்புக்கு எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் என்ற முடிவை அந்தக் கூட்டணி எடுக்க வேண்டும்.

அதன் பின்னரே, எத்தனை தொகுதிகள் ஹிண்ட்ராப்புக்கு ஒதுக்கப்படுகின்றன என்பதை வைத்து, இந்த நான்கு மஇகா தொகுதிகளில் எந்தத் தொகுதியில் ஹிண்ட்ராப் களமிறங்கும் – அந்த இயக்கத்தின் சார்பாக களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார் – என்பது போன்ற விவரங்கள் தெளிவாகத் தெரிய வரும்!

-இரா.முத்தரசன்