Home கலை உலகம் ‘விழிப்போம் வா’ – தமிழின் முதல் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பாடல்!

‘விழிப்போம் வா’ – தமிழின் முதல் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பாடல்!

1044
0
SHARE
Ad

Vizhippom Vaaகோலாலம்பூர் – எச்ஐவி/எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் கூட, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு ஆளாகி வருகின்றார்கள். இதனைத் தடுக்கவும், எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுகாதார அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மலேசிய சுகாதார அமைச்சும், மலேசிய எயிட்ஸ் கவுன்சில் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதனிடையே,  உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, இளைஞர்களுக்கு எச்ஐவி/ எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாலன்ராஜ் இசையில், எம்.ஜெகதீஸ் இசை கோர்ப்பில், பாடலாசிரியர் ஃபீனிக்ஸ்தாசனின் வரிகளில், பாலன்ராஜ், எம்.ஜெகதீஸ், ஹம்சினி பெருமாள், விகடகவி மகேன் ஆகியோர் பாடியிருக்கும், ‘விழிப்போம் வா’ என்ற பாடல் வரும் டிசம்பர் 1-ம் தேதி, டிஎச்ஆர் ராகா வானொலியில், காலை 9 மணியளவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவிருக்கிறது.

#TamilSchoolmychoice

இப்பாடலின் தோற்றுநரான பாடலாசிரியர் ஃபீனிக்ஸ்தாசன் கூறுகையில், “எச்ஐவி/ எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், கட்டுரைகள் வடிவிலும், கதைகள் வடிவிலும், கவிதைகளாகவும் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன. ஆனால் பாடல் வடிவில் தமிழில் எங்குமே காணப்படவில்லை. இசை வடிவில், பாடலாக இதனைக் கொடுக்கும் போது, அது எளிதில் சென்றடையும் என்பதால், அதனைக் கருத்தில் கொண்டு தமிழில் இப்பாடலை உருவாக்கியிருக்கிறோம். உலக அளவில் தமிழில் செய்யப்படும் பல்வேறு எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இப்பாடலும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

கேஎஸ் மூவி செண்ட்ரியான் பெர்ஹாட், எம்எஸ்கே பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்பாடலைத் தயாரிக்கிறது. சாரதா சிவலிங்கம் கலை இப்பாடலுக்கான காட்சிகளை இயக்குகிறார்.

மிக விரைவில் இப்பாடலின் இசைக்காணொளி, அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஆதரவோடு வெளியீடு காணவிருக்கிறது.