Home நாடு “14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம்” – வேதமூர்த்தி சூளுரை

“14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம்” – வேதமூர்த்தி சூளுரை

1130
0
SHARE
Ad

waythamoorthy-hindraf-சிரம்பான் – கடந்த சனிக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம் என்று சூளுரைத்தார்.

“புத்ரா ஜெயாவிலிருந்து தேசிய முன்னணி அரசாங்கத்தை அகற்றுவோம். இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்கும் மஇகாவும் அடுத்த பொதுத் தேர்தலில் துடைத்தொழிக்கப்படுவதை ஹிண்ட்ராப் உறுதி செய்யும். தேசிய முன்னணியின் 50 ஆண்டு கால ஆட்சியில் மஇகா இந்திய சமுதாயத்தை முற்றாகத் தோல்வி காணச் செய்துவிட்டது” என்றும் வேதமூர்த்தி கடுமையாகச் சாடினார்.

hindraf-logo-ஹிண்ட்ராப்பின் இதே நிகழ்ச்சியில் ‘தேசிய முன்னணிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்பதைக் குறிக்கும் விதமான ‘சீரோ வோட் ஃபோர் பிஎன்’ (Zero Vote for BN) என்ற பிரச்சாரமும் தொடங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப் 2007-ஆம் ஆண்டு நடத்திய மாபெரும் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், டத்தோ சைட் இப்ராகிம், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார், அமனா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய  வேதமூர்த்தி “இந்தியர் புளுபிரிண்ட் என்றும், 150 மில்லியன் நிதி ஒதுக்கீடு என்றும் கூறுகிறார்கள். இது எல்லாம் பொய்கள். இப்படிச் சொல்லி சமுதாயத்தை ஏமாற்றுகிறார்கள். முதல் கட்டமாக அப்படியே 150 மில்லியன் கொடுக்கப்பட்டாலும், இது மிகச் சிறிய தொகை. அந்தத் தொகையும் இந்திய சமுதாயத்தை முழுமையாகச் சென்றடையவில்லை. மஇகா தங்களுக்குள் அரசு சார்பற்ற நிறுவனங்களின் மூலம் அந்தப் பணத்தை தங்களுக்கே ஒதுக்கிக் கொண்டார்கள்” என்றும்  வேதமூர்த்தி குற்றம் சாட்டினார்.

MIC-logoஇருப்பினும் கிராமப்புற, தோட்டப்புற மக்களிடையே மஇகாவுக்கான ஆதரவு இன்னும் இருக்கிறது என்பதையும் வேதமூர்த்தி ஒப்புக் கொண்டார்.

“பக்காத்தானுக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் ஆதரவைக் கொண்டு அந்தக் கூட்டணி திருப்தியடைந்திருக்கிறது. கெடா, ஜோகூர், நெகிரி செம்பிலான், பேராக் போன்ற மாநிலங்களில் உள்ள புறநகர் பகுதிகளில் உள்ள இந்திய வாக்காளர்களை நோக்கிப் பிரச்சாரம் செய்ய, எதிர்க்கட்சிகளில் போதுமானவர்கள் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.

எனினும் நகர்ப்புற இந்தியர்களும், மேல்மட்ட இந்தியர்களும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் இந்தியர்களும் கண்டிப்பாக பக்காத்தான் பக்கம் ஆதரவாக இருக்கின்றனர் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.