நேற்று சனிக்கிழமை (25 நவம்பர் 2017) சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி “இருப்பினும் சங்கப் பதிவதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட எங்களின் அரசியல் கட்சியாக மாறும் விண்ணப்பத்தை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என நம்புகிறோம். எனவே பக்காத்தானின் மற்ற உறுப்பியக் கட்சிகள் அவர்கள் கடந்த பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற தொகுதிகளில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றும் நம்புகிறோம்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பக்காத்தான் உறுப்பியக் கட்சிகள் கடந்த பொதுத் தேர்தலில் வென்றெடுத்த தொகுதிகள் எங்களுக்கு வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹிண்ட்ராப் 2007-ஆம் ஆண்டு நடத்திய மாபெரும் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், டத்தோ சைட் இப்ராகிம், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார், அமனா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அண்மையில் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீரைச் சந்தித்த ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, பக்காத்தானில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்தார்.
அடுத்து பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஹிண்ட்ராப்பின் விண்ணப்பத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால், பக்காத்தானின் உறுப்பியக் கட்சிகளின் சின்னங்களின் கீழ் மற்றும் பக்காத்தான் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட ஹிண்ட்ராப் உத்தேசித்துள்ளது.
ஆனால், பக்காத்தான் கூட்டணியின் பதிவே இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குள் அந்தக் கூட்டணியும், அதன் சின்னமும் சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்படுமா என்ற ஐயப்பாடும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலை தொடர்ந்தால், பக்காத்தானில் ஹிண்ட்ராப் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஜசெக, பிகேஆர், பெர்சாத்து, அமானா போன்ற கட்சிகளின் சின்னங்களின் போட்டியிடும் சூழ்நிலைக்கு ஹிண்ட்ராப் தள்ளப்படும்.