Home நாடு இந்தியர்கள் துணை முதல்வராகியதும், சட்டமன்ற அவைத் தலைவரானதும் எங்களால்தான் – ஜசெகவின் அந்தோணி லோக்

இந்தியர்கள் துணை முதல்வராகியதும், சட்டமன்ற அவைத் தலைவரானதும் எங்களால்தான் – ஜசெகவின் அந்தோணி லோக்

1131
0
SHARE
Ad
anthony loke-dap-hindraf-10th anniversary-25112017
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு விழாவில் அந்தோணி லோக் உரையாற்றுகிறார்.

சிரம்பான் – 2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தியர்களை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமிக்க முடியும் என்பதை எதிர்க்கட்சியினர்தான் நடத்திக் காட்டினர் என ஜசெகவின் அமைப்புச் செயலாளரும், சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அந்தோணி லோக் கூறினார்.

நேற்று (சனிக்கிழமை 25 நவம்பர் 2017) சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோதே அந்தோணி லோக் இவ்வாறு கூறினார்.

இத்தகையப் பதவிகளைப் பெற முடியும் என மஇகாவுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“2008 பொதுத் தேர்தலில் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சிக் கூட்டணி அரசியலில் உச்சகட்டத்தை அடைந்தது. 2008-க்கு முன்னர் இந்தியர்களிடையே எழுச்சி இருந்ததில்லை. இந்த நாட்டில் ஒரு மாநிலத்தின் துணை முதல்வராக ஓர் இந்தியர் நியமிக்கப்பட முடியும் என்பதுகூட மஇகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. 2008-இல் நாங்கள் பினாங்கைக் கைப்பற்றியதும், வரலாற்றில் முதன் முறையாக ஜசெகவின் பிறை சட்டமன்ற உறுப்பினர் பி.இராமசாமியை துணை முதல்வராக நியமித்தோம். அப்போது ஏற்பட்ட அரசியல் சுனாமியும், மக்கள் சக்தி இயக்கத்தின் பிரச்சாரமும்தான் இந்தத் தேர்தல் வெற்றிகளுக்கு வழிவகுத்தன. தேசிய முன்னணியின் 50 ஆண்டுகால ஆட்சியில் ஒருமுறை கூட இந்தியர் ஒருவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதில்லை” என்றும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.

“நாங்கள் இந்த நடைமுறையை உருவாக்கி விட்டதால், அடுத்து பினாங்கில் ஆட்சி அமைக்கும் எந்தக் கட்சியும் மீண்டும் இந்தியர் ஒருவரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

“அதே போன்றுதான், பேராக் மாநிலத்திலும் சட்டமன்ற அவைத் தலைவராக இந்தியர் ஒருவரை நியமித்தோம். துரோனோ சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, மீண்டும் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தபோதும், மஇகாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர்தான் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியர் ஒருவர் மாநில சட்டமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்பட முடியும் என்பது அதற்கு முன்னால் மஇகாவுக்குத் தெரியுமா?” என்றும் அந்தோணி லோக் கேள்வி எழுப்பினார்.

நேற்று நடந்த ஹிண்ட்ராப் பேரணியின் 10-ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் ‘தேசிய முன்னணிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்பதைக் குறிக்கும் விதமான ‘சீரோ வோட் ஃபோர் பிஎன்’ (Zero Vote for BN) என்ற பிரச்சாரமும் தொடங்கப்பட்டது.