Home கலை உலகம் திரைவிமர்சனம்: “அண்ணாதுரை” – விஜய் அந்தோணி மேலும் மெருகேற்றியிருக்கலாம்!

திரைவிமர்சனம்: “அண்ணாதுரை” – விஜய் அந்தோணி மேலும் மெருகேற்றியிருக்கலாம்!

1147
0
SHARE
Ad

Annadurai-movie-1கோலாலம்பூர் – வரிசையாக, அடுத்தடுத்து, வலுவான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் தனக்குப் பொருத்தமான கதாநாயகப் பாத்திரங்களில் தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்து வந்த விஜய் அந்தோணி. “அண்ணாதுரை” படத்தில் சற்றே சறுக்கி விட்டார் என்றே தோன்றுகிறது.

இரட்டை வேடக் கதை என்ற களமிருந்தும், அதில் புகுந்து விளையாட முற்படாமல், இரண்டு கதாபாத்திரங்களிலும் தனது ஒரே பாணி முக பாவனை, உடல் மொழி, வசனம் பேசும் முறை ஆகியவற்றால் இரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறார்.

குழப்பமான திரைக்கதை

Annadurai-Movie-4குழப்பமான நீண்ட திரைக்கதை. ஏழு எட்டு வருட சம்பவங்களைத் தொடர்ச்சியாகச் சொல்கிறது.

#TamilSchoolmychoice

காதலி கண்முன்னே இறந்ததால் குடிகாரனாகித் திரிகிறார் அண்ணன் அண்ணாதுரை. பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக நல்ல பிள்ளையாக வலம் வருகிறார் இளையவர் தம்பித்துரை. இருவரும் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர்கள். பெயர் தேர்வு வெகு பொருத்தம்.

annadurai-movie-still-5தம்பிக்குப் பெண்பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் அண்ணாதுரைக்கு பணப் பிரச்சனை ஏற்பட, தம்பி போன்று ஆள்மாறாட்டம் செய்து, அந்தப் பணத்தை தம்பியின் மாமனாரிடம் இருந்து பெற்றுவர, அதைத் தொடர்ந்து எழும் மோதல்கள், குடும்பப் பிரச்சனைகள் – இவற்றுக்கிடையில் எதிர்பாராதவிதமாக அண்ணாதுரையால் கொலை ஒன்று நிகழ்ந்துவிட, ஏழு வருடம் சிறைவாசம் செல்கிறார் அண்ணாதுரை.

சிறை முடிந்து வெளியே வந்து பார்த்தால், நல்லவனான தம்பி, ஊரிலேயே பெரிய ரவுடியாகத் திகழ்கிறான். எப்படி நடந்தது இந்த மாற்றம் என்பதை இடைவேளைக்குப் பின்பாதி கதை சொல்கிறது.

அதன் பிறகு தம்பியைக் காப்பாற்ற, அண்ணாதுரை எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்தான் திரைக்கதை.

விஜய் அந்தோணியின் அதே பாணி நடிப்பு

annadurai-movie still-2திரைக்கதை மோசமில்லை. விறுவிறுப்பாகத்தான் செல்கிறது. இருந்தாலும் இடையிடையே அழுது வடியும் அம்மா, மகனுக்கு எதிரான தந்தை, நல்ல குணம் கொண்ட மாமனார் – அவர்கள் வரும் காட்சிகள் எல்லாம் நாம் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி தொடர்களை ஒத்திருக்கின்றன.

படத் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் என்பதால் அப்படி இருக்குமோ?

விஜய் அந்தோணி படத்திற்கு இசையமைத்ததோடு, இந்த முறை வித்தியாசமாக படத் தொகுப்பையும் (எடிட்டிங்) கவனித்திருக்கிறார். படத்தின் தலைப்புப் பாடலும், ஒரு காதல் பாடலும் பரவாயில்லை ரகம்!

annadurai-movie-still-6எனினும், இரட்டை வேடம் என்றாலே எம்ஜிஆர் காலம் தொட்டு, இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில் உடல் மொழியால் சில வித்தியாசங்களைக் காட்டுவதுதான் வழக்கம். ஆனால், விஜய் அந்தோணியோ வித்தியாசம் காட்டியிருப்பது ஒரு கையில் பச்சை குத்திக் கொண்டு! அவ்வளவுதான்! மற்றதெல்லாம் இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே மாதிரி பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள், சண்டை போடுகிறார்கள்.

முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை கதாநாயகன்(கள்) முகத்தை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே வைத்திருந்தால் எந்த இரசிகனுக்கும் – எப்படிப்பட்ட நல்ல படமாக இருந்தாலும், போரடிக்கவே செய்யும்.

கொஞ்சம் மாறுங்கள் விஜய் அந்தோணி!

மற்ற அம்சங்கள்

Annadurai-Movie-still-4ஓர் ஊரில் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி அவருக்கு கீழே வில்லன்கள் எத்தனை அடுக்குகளாகச் செயல்படுகிறார்கள் என்பதை விலாவாரியாகக் காட்டியிருக்கிறார்கள். அனைவருமே அத்தனை கொடூரமான, ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்கிறார்கள். படக்கதை நடப்பது திருக்கோவிலூரில்! இயக்குநர் ஜி.சீனிவாசனின் சொந்த ஊராம்!

தில்ராஜ் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேரக் காட்சிகள்!

காளி வெங்கட் வழக்கம்போல் ஆட்டோ ஓட்டுநராக வருகிறார். பழைய நடிகர் நளினிகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வயதான தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் வரலாம்.

annadurai-movie-stillபடத்தின் மைய இழையாக தற்போது தமிழக சினிமா உலகையே உலுக்கியிருக்கும் கந்து வட்டிப் பிரச்சனையைக் காட்டியிருக்கிறார்கள். அதிலும் வெற்றுத் தாளில் கையெழுத்துப் போடும் நெருக்கடிகளையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் காட்டியிருக்கிறார்கள்.

நெகிழ்ச்சியான காட்சிகளுக்கும், கூர்மையான வசனங்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக முதல் காட்சியில் வரும் புதுமுக நடிகை சிறப்பான, கவரும் நடிப்பை வழங்கியிருக்கிறார். பெயர்தான் தெரியவில்லை.

விஜய் அந்தோணி தனது நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் மேலும் மெருகேற்றியிருந்தால், இயக்குநரும் அதைக் கவனித்துச் சரிசெய்திருந்தால், அண்ணாதுரை இன்னும் சிறப்பாக வந்திருக்கும்!

-இரா.முத்தரசன்