சென்னை – ஏற்கனவே அறிவித்தபடி, நடிகர் விஷால் இன்று திங்கட்கிழமை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றுதான் இறுதி நாள் ஆகும்.
விஷால் தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
எனவே தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகிக் கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஜெ.தீபாவும் போட்டி
இதற்கிடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வேட்பாளராக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் வரலாறு காணாத அளவுக்கு மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இடைத் தேர்தலாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் உருவெடுத்துள்ளது.
தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை
இந்த இடைத் தேர்தல் தொடர்பான மற்றொரு விவகாரமாக உருவெடுத்திருப்பது டிடிவி தினகரன் போட்டியிடப் போகும் தேர்தல் சின்னமாகும். மீண்டும் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என தினகரன் செய்திருந்த விண்ணப்பத்தை இன்று திங்கட்கிழமை விசாரித்த புதுடில்லி உச்ச நீதிமன்றம் அத்தகைய முடிவை எடுக்க முடியாது என அவரது விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது.
மாறாக, தமிழகத் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சுயேட்சை சின்னத்தில்தான் தினகரன் போட்டியிட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.