Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘அருவி’ – அன்பு செய்க அனைவரையும்!

திரைவிமர்சனம்: ‘அருவி’ – அன்பு செய்க அனைவரையும்!

1468
0
SHARE
Ad

Aruviகோலாலம்பூர் – தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெளியாகும் அரை டஜன் படங்களில் ஒரு சில படங்கள் திரையரங்கு வரை நம்மை மகிழ்ச்சிபடுத்தும், சில படங்கள் வீடு வரும் வரை அசை போட வைக்கும், ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே ஒருமுறை பார்த்துவிட்டால் போதும், நம் மனதில் எங்கோ ஒரு மூலையில் இடம்பிடித்துக் கொண்டு காலத்திற்கும் நினைவில் தங்கிவிடும்.

அந்த வகையில், அருவியும் நிச்சயம் மனதில் ஊற்றாக என்றும் ஊறிக் கொண்டே இருக்கும்.

படத்தின் தொடக்கமே தீவிரவாதியாகக் காட்டப்படுகிறார் கதையின் நாயகி அருவி. யார் இந்த அருவி? என்று அவரது பள்ளி காலம் தொடங்கி பின்னோக்கி விரிகிறது திரைக்கதை.

#TamilSchoolmychoice

அருவி.. குடும்பத்திற்கு மூத்த பெண். தந்தைக்கு மிகவும் செல்ல மகள். சிறு வயது முதல் சுதந்திரமாக வளர்க்கப்படுகிறாள். அதிக சுதந்திரத்தின் விளைவால் கொஞ்சம் நாகரீகமான நண்பர்களின் சகவாசம் கிடைக்கிறது. அதன் மூலம் மது போன்ற பழக்கங்களையும் ருசித்துப் பார்க்கிறார்.

aruvi_1510295085120இப்படி வெள்ளந்தியாகப் போய் கொண்டிருக்கும் அருவியின் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய சோகம் ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தை விட்டு விலகும் அருவி, சமூகத்தில் அனாதையாக விடப்படுகிறார்.

அனாதையாக விடப்படும் அருவியை இச்சமூகம் எப்படிப் பார்க்கிறது? இச்சமூகத்தை அருவி எப்படி பார்க்கிறார்? எப்படி எதிர்கொள்கிறார்? என்பதே கதையின் உச்சக்கட்ட சுவாரசியம்.

அருவி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன். அப்பப்பா.. எங்கே இருந்து தான் இப்படி ஒரு எதார்த்தமான முகவெட்டுடன் கூடிய பெண்ணை இயக்குநர் அருண் பிரபு கண்டுபிடித்தாரோ? அப்படியே அக்கதாப்பாத்திரத்திற்கு தத்ரூபமாகப் பொருந்துவதோடு, இயல்பான நடிப்பினாலும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

aruvi-movie-review-cover-25பள்ளி மாணவியாக வெள்ளந்திச் சிரிப்பிலும், கையில் துப்பாக்கி ஏந்தி மிரட்டும் தோரணையிலும், சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டும் துணிச்சலிலும், “அப்பா.. உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் பா.. எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு” என்று கண்ணீர் விட்டு கதறும் குழந்தைத்தனத்திலும் அதிதி, பல வருட அனுபவம் மிக்க நடிகர்களுக்கு இணையாக நடித்திருக்கிறார்.

அவருக்குத் துணையாக வரும் திருநங்கை எமிலி கதாப்பாத்திரமும் நடிப்பால் அசர வைக்கிறார்.

“இந்த ஆம்பளங்க இருக்காணுங்களே.. ரோட்டுல ஐஸ்வர்யா ராய் போனாக் கூட அப்படி பார்க்கமாட்டானுங்க.. ஆனா அரவாணி போனா வச்ச கண்ணு வாங்காமப் பார்க்குறானுங்க” என்று பல இடங்களில் அவர் பேசும் வசனம் சிந்திக்க வைக்கிறது.

Aruvi1படத்தில், ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வருகின்றது. படத்தின் மொத்த சுவாரசியத்தையும் தூக்கி அங்கு தான் வைத்திருக்கிறார் இயக்குநர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உண்மை முகம், சமூகப் பிரச்சினைகள், அன்பு, பாசம், மனிதம் என எல்லாம் அக்காட்சிகளில் ஒன்றாகக் கலந்து இனிக்கிறது. அதிலும் பனியாரக் கிழவி கதை கண்கலங்க வைக்கிறது.

பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜின் பின்னணி இசையும், பாடல்களும் கதையோடு பின்னிப் பிணைந்து கவிதை போல் மனதை தொடுகிறது.

ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு வீரியம் கூட்டியிருப்பதோடு, மிக எதார்த்தமாகப் பதிவாகியிருக்கிறது.

என்றாலும், கதையின் சொல்லப்பட்டிருக்கும் ஒரு மிக முக்கிய விசயத்தை சொல்லிய விதத்தில் இயக்குநரும், வசனகர்த்தாவும் கொஞ்சம் குழம்பியிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. படத்தின் சுவாரசியம் கருதி அதனை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

படத்தில் அருவி ஒரு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்.

அருவியால் தனது பாதிப்பு மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடிகிறது.

ஆனால் அருவிக்கு அப்பாதிப்பு மிக எளிதாக வந்துவிடுகிறது. அருவிக்கு அப்பாதிப்பு வருவதாகக் காட்டப்படும் முறை அறிவியல் பூர்வமாக சாத்தியம் இல்லை என்றே மருத்துவம் சொல்கிறது.

எது எப்படியோ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பொதுவான விசயம் நிரந்தரமில்லாத இவ்வுலகில் யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் அனைவரையும் அன்பு செய்க.

அந்த வகையில், ‘அருவி’ – பேரன்பின் ஊற்று! அன்பு செய்க அனைவரையும்!

-ஃபீனிக்ஸ்தாசன்