டென்பசார் – போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்கி வருகின்றது இந்தொனிசிய அரசு.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மூவரும் வெவ்வேறு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் என்றாலும், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் மூவரும் ஆரஞ்சு நிற சிறை உடை அணிந்தும், முகத்தை கருப்புத் துணியால் மறைத்தும் நிற்க வைக்கப்பட்டனர்.
அதில் ஒரு அமெரிக்கர், ஒரு மலேசியர் மற்றும் ஒரு ஆஸ்திரேலியர் இருந்தனர்.
அவர்களில் மலேசியர் கடந்த நவம்பர் 8-ம் தேதி, 3.03 கிராம் மரிஜூவானா என்ற போதைப் பொருள் இலைகளையும், 0.65 கிராம் வெள்ளை நிற நார்கோட்டிக்ஸ் அல்லது இட்ராஜோனோ பொடியையும் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
இப்போதைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்னவென்று தெரியவில்லை என்றாலும், போதைப் பொருள் குற்றத்திற்கு இந்தோனிசியா அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.