Home இந்தியா 2-வது தமிழக முதல்வரையும் தருமா போயஸ் கார்டன்?

2-வது தமிழக முதல்வரையும் தருமா போயஸ் கார்டன்?

734
0
SHARE
Ad

rajini-announcement-politics-31122017சென்னை – தமிழ் நாட்டு அரசியல் களத்தில் தனிக் கட்சித் தொடங்கி இறங்குகிறேன் – அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் – என ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது தமிழக முதல்வரைத் தரும் மையமாக சென்னையின் போயஸ் கார்டன் திகழுமா என்ற ஆர்வம் தமிழகம் எங்கும் – ஏன் உலகம் முழுவதுமே – எழுந்துள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம் கடந்த 40 ஆண்டு காலமாக இந்திய அரசியலின் மையமாகத் திகழ்ந்து வந்தது. ஆதரவாளர்கள் முதல் – இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர்கள் வரை, அனைவரும் ஜெயலலிதாவைக் காணவும், ஆதரவு தெரிவிக்கவும் கூடிய இடம் போயஸ் கார்டன்.

இன்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படி நேரடி அரசியலுக்கு வருவேன் என்று தனது இரசிகர்களிடத்தில் பலத்த கரவொலிகளுக்கிடையிலும், வாழ்த்து மழையிலும்  அறிவித்திருக்கிறார் ரஜினி.

#TamilSchoolmychoice

ரஜினியின் வீடு இருப்பதும் ஜெயலலிதா இருந்த அதே போயஸ் கார்டனில்தான். எனவே, தமிழகத்தின் இன்னொரு  முதல்வரையும் தரப்போகின்ற அதிர்ஷ்ட மையமாக போயஸ் கார்டன் திகழுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ரஜினி இன்று தனது இரசிகர்களிடத்தில் நிறைவுரையாக வழங்கிய உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவேன்.
  • பஞ்சாயத்துத் தேர்தல்கள் எனப்படும் உள்ளாட்சித் தேர்தல்களில் – குறுகிய காலமே இருக்கின்ற காரணத்தால் – தனது கட்சி போட்டியிடாது என்றும் ரஜினி அறிவித்து விட்டார்.
  • நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு. நான் பெயருக்கோ புகழுக்கோ வரவில்லை. காரணம், நான் கனவிலும் நினைக்காத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதிகமாக பெயரும் புகழும் உங்களால் அடைந்து விட்டேன்.
  • பதவிக்கும் ஆசைப்படவில்லை. பதவிக்கு ஆசையிருந்தால் 1996 ஆம் ஆண்டிலேயே நான் அரசியலுக்குள் வந்திருப்பேன். அப்போதே நான் பதவி வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன். 45 வயதில் வராத பதவி ஆசை – 68-வது வயதில் வருமா? அது என் ஆன்மீகத்துக்கு இழுக்கல்லவா?
  • நாம் மக்களின் காவலர்களாக மாறுவோம். முதல் கட்டமாக அனைத்து ரஜினி இரசிகர் மன்றங்களையும் முறைப்படி பதிவு செய்வோம். பதிவு பெற்ற இரசிகர் மன்றங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதைவிட பன்மடங்கு அதிகமாக  பதிவு பெறாத இரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அனைத்தையும் பதிவு செய்து ஒருங்கிணைப்போம். தெருவுக்குத் தெரு நமது இரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். காரணம், அரசியல் என்பது சாதாரண போராட்டம் அல்ல.
  • உரிய நேரத்தில் கட்சி ஆரம்பித்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவேன். அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் நமது படையும் இருக்கும்.
  • எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதா இல்லையா என்பதை கூடிய விரைவில் முடிவு செய்வேன்.
  • அதுவரையில், இரசிகர் மன்றங்களைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதற்கெல்லாம் வேறு சிலர் இருக்கிறார்கள்.
  • எனது கொள்கை உண்மை, உழைப்பு, உயர்வு. எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும்.தர்மமான, நியாயமான அரசியல்தான் ஆன்மீக அரசியல் என்ற விளக்கத்தையும் ரஜினி தெரிவித்திருக்கிறார்.
  • எனது அரசியல் செயல்பாடு நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம் என்பதாகத்தான் இருக்கும் என்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

-இரா.முத்தரசன்