கோலாலம்பூர் – கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகத் தான் தற்காத்து வரும் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை, பிகேஆர் கட்சி ஒப்புக் கொண்டால் துன் மகாதீருக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி அறிவித்திருக்கிறார்.
2013 பொதுத் தேர்தலில் அஸ்மின் அலி பிகேஆர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு 4,734 வாக்குகள் பெரும்பான்மையில் வென்ற தொகுதி இது
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரையில் அது எந்தத் தொகுதி என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
பக்காத்தான் கூட்டணி தலைவரான மகாதீர், அந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் தேர்ந்தெடுக்கப்போகும் தொகுதி எது என்பதைக் காண அரசியல் ஆர்வலர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
லங்காவியில் மகாதீர் போட்டியிடுவாரா?
புத்ரா ஜெயா, குபாங் பாசு, லங்காவி ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என ஆரூடம் கூறப்படுகிறது. புத்ரா ஜெயா அரசு ஊழியர்களைக் கொண்ட தொகுதியாதலால் அச்சத்தால் அவர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பதால் அங்கு போட்டியிடுவதை மகாதீர் தவிர்க்கக் கூடும்.
குபாங் பாசு அவரது பழைய தொகுதியாகும். இங்கு அவருக்குப் பதிலாக அவரது மகன் முக்ரிஸ் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
மகாதீர் வெல்லக் கூடிய பொருத்தமான தொகுதியாக லங்காவி பார்க்கப்படுகிறது. அங்கு அவரது தூர நோக்குத் திட்டங்களால் அந்தத் தீவு கண்டிருக்கும் மாபெரும் வளர்ச்சியாலும், அதனால் தங்களின் பொருளாதார வளம் பன்மடங்குப் பெருகியதாலும் அங்குள்ள வாக்காளர்கள் மகாதீருக்கு தங்களின் ஒருமித்த ஆதரவை வழங்குவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பக்காத்தான் கூட்டணியின் தொகுதி பங்கீட்டிலும் லங்காவி, குபாங் பாசு இரண்டும் மகாதீர் தலைமையேற்றுள்ள பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில்தான், தனது கோம்பாக் தொகுதியை விட்டுத் தரத் தயாராக இருப்பதாக அஸ்மின் அலி அறிவித்திருக்கிறார்.