நான்கு நிறுவனங்களிலும் தலா 51 விழுக்காடு பங்குகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும்.
நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலம் சேவைத் தரத்தை உயர்த்துவதோடு, அரசாங்கத்துக்கு வருமானத்தை ஏற்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா விமான சேவை மற்றும் வெளிநாடுகளுக்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மலிவுக் கட்டண சேவை ஆகிய இரண்டு சேவைகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிறுவனமாக விற்கப்படும். இந்திய வட்டார சேவைகள் ஒரு நிறுவனமாகவும், விமான நிலையங்களின் தள சேவைகள் ஒரு நிறுவனமாகவும், ஏர் இந்தியாவின் தொழில் நுட்ப, பொறியியல் சேவைகள் ஒரு நிறுவனமாகவும் பிரித்து விற்கப்படும்.
இந்த விற்பனை நடவடிக்கைகள் 2018 இறுதிக்குள் நிறைவு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா – இந்தியன் ஏர்லைன்ஸ் என இரு இந்திய அரசு நிறுவனங்களாகச் செயல்பட்டு வந்த விமான சேவைகள் 2007-இல் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக செயல்படத் தொடங்கின. இருப்பினும் தொடர்ந்து பெரும் நஷ்டத்தை ஏர் இந்தியா சந்தித்து வந்தது.