Home நாடு கேலாங் பாத்தா: அம்னோவுக்கு பதிலாக மீண்டும் மசீச போட்டி

கேலாங் பாத்தா: அம்னோவுக்கு பதிலாக மீண்டும் மசீச போட்டி

1244
0
SHARE
Ad
lim_kit_siang-DAP
லிம் கிட் சியாங் – கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்

ஜோகூர் பாரு – கடந்த 2013 பொதுத் தேர்தலில் நட்சத்திரத் தொகுதியாக ஒட்டுமொத்த மலேசியாவும் உற்றுக் கவனித்த தொகுதி ஜோகூர் மாநிலத்தில் உள்ள கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி.

காரணம், முதன் முறையாக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இங்கு 2013-இல் போட்டியிட்டதால் அவரால் ஜோகூர் மாநிலத்தில் – அதுவும் ஒரு புதிய தொகுதியில் – மசீச இரண்டு முறை ஏற்கனவே வென்ற ஒரு தொகுதியில் – வெல்ல முடியுமா என்ற ஐயப்பாடுகள் இருந்தன.

வழக்கமாக மசீச போட்டியிட்டு வந்த இந்தத் தொகுதியில் 2004, 2013 ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மசீச போட்டியிட்டு வென்றது.

#TamilSchoolmychoice

ஆனால், 2013-இல் லிம் கிட் சியாங் கேலாங் பாத்தாவில் போட்டியிட முன்வந்தபோது அதிர்ச்சியடைந்த தேசிய முன்னணி புதிய வியூகம் ஒன்றை வகுத்தது. அப்போது ஜோகூர் மாநில மந்திரி பெசாராக இருந்த டத்தோஸ்ரீ அப்துல் கனி ஒத்மான் லிம் கிட் சியாங்குக்கு எதிராக நிறுத்தப்பட்டார். மலாய் வாக்காளர்களின் ஆதரவோடு லிம் கிட் சியாங்கைத் தோற்கடிக்க முடியும் என தேசிய முன்னணி நம்பியது.

மசீசவும் கேலாங் பாத்தா தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது.

ஆனால், தேசிய முன்னணியின் அனைத்து நம்பிக்கைகளையும் நொறுங்கச் செய்தார் லிம் கிட் சியாங். 14,762 வாக்குகள் வித்தியாசத்தில் கேலாங் பாத்தா தொகுதியில் வென்று காட்டினார்.

gelang patah-parliament-2013-results
கேலாங் பாத்தா நாடாளுமன்றம் – 2013 தேர்தல் முடிவுகள்

இந்த முறை இந்த விளையாட்டு வேண்டாம் என அம்னோ, மசீசவுக்கே கேலாங் பாத்தா தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டது.

மீண்டும் மசீச இங்கு போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் லிம் கிட் சியாங் மீண்டும் இங்கே போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஓர் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது குணமடைந்து வரும் கிட் சியாங் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வாரா அல்லது மீண்டும் போட்டியிடுவாரா – அப்படியே போட்டியிட்டால் எந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பார் என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

ஜசெகவில் இணைந்துள்ள முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிமுக்கு லிம் கிட் சியாங் கேலாங் பாத்தா தொகுதியை விட்டுக் கொடுப்பார் என்ற ஆரூடமும் கூறப்படுகிறது.

இன்றைய நிலையில் கேலாங் பாத்தா தொகுதியை பக்காத்தான் கூட்டணி மீண்டும் ஜசெகவுக்கே ஒதுக்கியிருக்கிறது.  தேசிய முன்னணியோ மீண்டும் மசீச இங்கு போட்டியிட பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.

இந்த நடப்புகளைத் தொடர்ந்து, ஜசெக – மசீச இடையிலான போட்டி கேலாங் பாத்தாவில் நிச்சயம் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.

-இரா.முத்தரசன்