Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘பாகமதி’ – திகில், மர்மம், எதிர்பாராத திருப்பம்!

திரைவிமர்சனம்: ‘பாகமதி’ – திகில், மர்மம், எதிர்பாராத திருப்பம்!

1555
0
SHARE
Ad

Bhaagamathi2கோலாலம்பூர் – அரசி கதாப்பாத்திரம் என்றால் அது அனுஷ்கா தான் என்று சொல்லும் அளவிற்கு ‘அருந்ததீ’, ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என அடுத்தடுத்த வரலாற்றுப் படங்களாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா.

அந்த வகையில், ஜி.அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருக்கும் ‘பாகமதி’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

பாகமதி முன்னோட்டத்தைப் பார்க்கும் போது, இது வரலாற்றுப்படமா? இன்றைய காலத்துப் படமா? என்ற குழப்பம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

#TamilSchoolmychoice

ரசிகர்களுக்கு ஏற்பட்ட அந்தக் குழப்பம் தான் படம் பார்க்கும் பல ஆச்சரியங்களைக் கொடுக்கின்றது.

கதை என்ன?

அடுத்த முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் பெயரெடுத்த அமைச்சர் ஜெயராமுக்கு எதிராக அவரது புகழைக் கெடுக்க நினைக்கிறது ஒரு கூட்டம்.

bhaagamathi3அதற்காக அமைச்சர் ஜெயராமின் கீழ் ஐஏஸ் அதிகாரியாகப் பணியாற்றிய அனுஷ்காவைக் குறி வைக்கிறது அக்கும்பல். ஆனால் அனுஷ்கா ஒரு கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார்.

ஜெயராமைப் பற்றிய சில உண்மைகளை வெளியே கொண்டு வர போலீஸ் அதிகாரி ஆஷா சரத் தலைமையிலான ஒரு குழு, அனுஷ்காவை சட்டத்திற்கு விரோதமாக ஒரு பழைய அரண்மனையில் வைத்து விசாரணை செய்கிறது.

அங்கு தான் அனுஷ்கா, பாகமதியாக மாறுகிறார். அனுஷ்காவிற்கும் பாகமதிக்கும் என்ன சம்பந்தம்? எதிரிகள் விரித்த வலையில் ஜெயராம் விழுந்தாரா? போன்ற முடிச்சுகளும், கிளைமாக்சில் அது ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுவதும் தான் படத்தின் சுவாரசியம்.

ரசிக்க

Bhaagamathi4அனுஷ்கா அருமையான நடிப்பு.. ஐஏஎஸ் அதிகாரியாக, பாகமதியாக, பயந்து நடுக்கும் பெண்ணாக, அடடா.. என்று சொல்லும் அளவிற்கு மூன்று விதமான அசத்தல் நடிப்பு. மீண்டும் ஒரு சந்திரமுகியைப் பார்த்தது ஒரு உணர்வு ஏற்பட்டது. அதிலும் அந்த சுத்தியலில் தன்னைத் தானே ஆணி அறைந்து கொள்ளும் காட்சி பயத்தின் உச்சம்.

“எப்ப வேணா வரலாம் போலாங்கிறது இது என்ன பரதேசிமடமா?” என்று அனுஷ்கா கூறும் போது திகிலிலும் கூட சிரிப்பு வருகின்றது.

அதேபோல், காவலுக்கு இருக்கும் அந்த இரு போலீஸ்காரர்களின் நடிப்பு விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

Bhaagamathiபடத்தின் கிராபிக்ஸ் காட்சிகள். பாழடைந்த அரண்மனையைத் தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது. ஆர்.மதி, சுராஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு பெரும்பாலான காட்சிகள் இருட்டில் பதிவு செய்யப்பட்டு ரசிகர்களை மிரட்டியிருக்கிறது.

அதற்கேற்ப, தமன் இசை காட்சிகளின் வீரியத்தைக் கூட்டியிருக்கிறது. என்றாலும் சில இடங்களில் அதிக சத்தம் காதைப் பிளக்கிறது.

அனுஷ்கா தவிர, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், தலைவாசல் விஜய், வித்யூலேகா ஆகியோரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கின்றது.

ஆஷா சரத்துக்கு அதே போலீஸ் கதாப்பாத்திரம் தான். அவரது விசாரணையும், முகபாவனைகளும் அப்படியே ‘பாபநாசம்’ திரைப்படத்தைப் பிரதிபலிக்கிறது. அதைக் கொஞ்சம் மாற்ற முயற்சி செய்திருக்கலாம்.

திரைக்கதை அமைப்பு தொடக்கத்தில் கொஞ்சம் இழுத்தடித்தாலும், பாகமதியின் கதைக்குள் நுழைந்தவுடன் விறுவிறுப்பு கூடியதோடு, முடிவில் எதிர்பார்க்காத திருப்பம் ரசிக்க வைக்கின்றது.

திகில் பட ரசிகர்களுக்கு ‘பாகமதி’ நிச்சயம் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-ஃபீனிக்ஸ்தாசன்