சென்னை – தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வரப்போவதை கடந்த டிசம்பர் 31-ம் தேதி உறுதி செய்த ரஜினிகாந்த், அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை, ‘ரஜினி மக்கள் மன்றம்’ என மாற்றி பொறுப்பான நிர்வாகிகளை நியமித்து வருகின்றார்.
இதனிடையே விவசாய அணியை உருவாக்கும் முயற்சியிலும் தற்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி பிரத்யேகமாக பேசிய காணொளி வெளியிடப்பட்டது.
அதில் ரஜினி கூறியிருப்பதாவது:
“நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். அரசியல் என்பது பொதுநலம், சுயநலமல்ல, மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம்.”
“ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்”
“தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லவில்லை அவர்களையும் கவனிக்க வேண்டும்.” என்று ரஜினி கூறியிருக்கிறார்.