சென்னை – பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதையடுத்து மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டீசல் விலை உயர்வு, புதிய பேருந்து வாங்குதல், பழைய பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் வாங்குதல் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது”
“என்றாலும், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளினை கருத்தில் கொண்டும், பொது மக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வேண்டிய போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு நன்கு பரிசீலித்து பேருந்துக் கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது” என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
நாளை திங்கட்கிழமை தொடங்கி, விரைவு பேருந்து கட்டணம் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், மாநகர – நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.