ரோம், மாரச் 27- இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மாசி மிலியானோ, சால்வத்தோரே ஆகியோர் மீது கேரள நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் செல்வதாக கூறி, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இத்தாலிக்கு சென்ற அந்த 2 வீரர்களையும் திருப்பி அனுப்ப முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதர் வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதன்பின், இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய இத்தாலிய அரசு, அந்த 2 வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்பியது. அவர்கள் மீதான வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
இந்த சூழ்நிலையில், இத்தாலி நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஜியுலியோ டெர்சி நேற்று ராஜினாமா செய்தார். அவர் நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘நமது கடற்படை வீரர்களை திருப்பி அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டதற்காக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்றார்.