கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் நெஞ்சு தொற்று காரணமாக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் வெளியானது முதல், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் அரசியல் கூடாரங்களில் சற்றே மன சஞ்சலம் பரவத் தொடங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாது.
92-வது வயதைக் கடந்த நிலையில் தொடர்ந்து தனது அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய உடல்நலம் மகாதீருக்கு இருக்கிறதா – அதனால் பாதிப்புகள் ஏதும் உண்டா – என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரங்களில் எழுந்தன.
ஆனால், இதோ, ஒரே வாரத்தில் மீண்டும் உடல் நலம் பெற்று அதே புன்சிரிப்புடன், மாறாத உற்சாகத்துடன் கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 15-ஆம் தேதி இல்லம் திரும்பியிருக்கிறார் மகாதீர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவரைச் சந்திக்கச் சென்றபோது மகாதீர் அரசியல்தான் பேசிக் கொண்டிருந்தார், “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என நான் ஆலோசனை கூறினேன் என டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறியிருந்தார்.
சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் இதோ மீண்டும் அரசியல் களத்தில் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டார் மகாதீர். தொடர்ந்து பக்காத்தான் தலைவர்களுடன் சந்திப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பு, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை பதிவு செய்யாததற்கு சங்கப் பதிவிலாகா மீது வழக்கு என்ற அறிவிப்பு – தனது அரசியல் பணிகளையும் தொடக்கி விட்டார் மகாதீர்.