Home நாடு மகாதீரின் குதிரைகளுக்கான செலவை விட எனது உணவு மலிவு தான்: நஜிப் பதிலடி!

மகாதீரின் குதிரைகளுக்கான செலவை விட எனது உணவு மலிவு தான்: நஜிப் பதிலடி!

1016
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மகாதீர் தனது குதிரைகளுக்கு உணவளிக்க செய்யும் செலவுகளைக் காட்டிலும் தான் சாப்பிடும் கியுனா வகை உணவு விலை குறைவு தான் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலடி கொடுத்திருக்கிறார்.

கடந்த வாரம் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2018 வரவு செலவுத்திட்டக் கூட்டத்தில் பேசிய நஜிப், தனது மகனின் பரிந்துரையின் படி, தான் இப்போது அரிசிக்குப் பதிலாக கியுனா உணவை தான் எடுத்து வருவதாக நஜிப் தெரிவித்தார்.

கியுனா என்பது ஒரு வகை தானிய உணவு ஆகும். தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நஜிப்பின் கியுனா உணவு வகை குறித்துக் கருத்துத் தெரிவித்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்த வயதிலும் தான் உள்ளூரில் கிடைக்கும் அரிசியைத் தான் சாப்பிடுவதாகவும், நஜிப் சாப்பிடும் கியுனா உணவு, உள்ளூர் அரிசியை விட 20 மடங்கு விலை அதிகம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நேற்று திங்கட்கிழமை மகாதீரின் இந்தக் கருத்திற்குப் பதிலடி கொடுத்த நஜிப், மகாதீர் தனது குதிரைகளுக்கு கொடுக்கும் உணவுகளுக்கான செலவை விட, தான் சாப்பிடும் கியுனா வகை உணவு விலை குறைவு தான் என்று தெரிவித்தார்.

“நான் சாப்பிடும் கியுனா வகை உணவு கூட பிரச்சினையாக்கப்படுகின்றது. நான் இப்போதும் நாசி லெமாக், நாசி வாங்கி ஆகிய உணவுகளை சாப்பிடுகிறேன்.”

“ஆனால் மகாதீர் தனது குதிரைகளுக்கு அதை விட அதிகமாகச் செலவு செய்கிறார் என்பதை யோசிக்கிறாரா?”

“ஒரு மாதத்திற்கு அவரது குதிரைக்கு ஆகும் செலவை, நான் மூன்று ஆண்டுகளுக்கு கியுனா வாங்கிச் சாப்பிடப் பயன்படுத்துவேன். மகாதீரிடம் எத்தனை குதிரைகள் உள்ளன?” என்று நஜிப் கேள்வி எழுப்பியிருக்கிறார்.