சிங்கப்பூர் – இன்னும் சில மாதங்களில் சிங்கப்பூர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யவிருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.
இன்னும் அதிக பொறுப்புள்ள, இளம் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் லீ சியான் லூங் குறிப்பிட்டிருக்கிறார்.
“நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பின்னர், நான் அமைச்சரவையில் மாற்றம் செய்யவிருக்கிறேன். இளம் உறுப்பினர்களுக்கு அனுபவத்தையும், பொறுப்பையும் வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்படவிருக்கிறது.”
“இதன் மூலம், எனக்கு அடுத்துப் பதவியேற்பவர்களுக்கு இந்த அனுபவம் வாய்ந்த வலுவான அணி ஆதரவாக இருந்து, சிங்கப்பூரின் எதிர்காலத்தை இன்னும் பிரகாசமாக மாற்ற முனைப்பாகச் செயல்படும்” என்று லீ சியான் லூங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று குறிப்பிட்டிருக்கிறார்.
2021-ம் ஆண்டிற்கு முன்னதாக சிங்கப்பூரின் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதனிடையே, இன்னும் சில வருடங்களில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலக விருப்பதாக கடந்த ஆண்டு லீ சியான் லூங் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.