Home நாடு 21-ம் நூற்றாண்டு கற்றல் திறன்களும் கற்றலுதவிகளும் பட்டறை!

21-ம் நூற்றாண்டு கற்றல் திறன்களும் கற்றலுதவிகளும் பட்டறை!

7058
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கெடா மாநில கல்வி இலாகா, கெடா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், இல்ஹாம் கல்விக் கழகத்தின் இணை ஆதரவில் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்களும் கற்றலுதவிகளும் என்ற தலைப்பிலான பட்டறை கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் கணித அறிவியல் ஆசிரியர்களுக்காக நேற்று முன்தினம் (25 பிப்ரவரி 2018) ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைப்பெற்றது.

பட்டறையை வழிநடத்திய முனைவர் குமாரவேலு இராமசாமி

இப்பட்டைறையை 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் சிறந்த ஆளுமையைப் பெற்ற  கல்வி அமைச்சின் கல்வி நிர்வாக பயிற்சிக் கழகமான அமினுடின் பாக்கி கல்வி கழகத்தின் மூத்த விரிவுரையாளர் முனைவர் குமாரவேலு இராமசாமி வழி நடத்தினார்.

தொடக்கவுரையாற்றும் கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் முனுசாமி செங்கோடன்.

கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 115 கணித அறிவியல் ஆசிரியர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றிய பாயா பெசார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரும் கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவருமான முனுசாமி செங்கோடன் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் திறன்களில் ஆசிரியர்கள் ஆளுமை பெற்றிருப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

ஆசிரியர்களின் ஊடாகவே இத்திறன்கள் மாணவர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடக்க நிகழ்ச்சிக்குப் பின் நாளைய கல்வி துறையின் மாற்றங்களும் சவால்களும் குறித்து முதல் அமர்வு இடம்பெற்றது. நான்காம் தொழிலியல் புரட்சி  – மனிதனும் இயந்திரமும், கல்வித் துறை மாற்றங்கள் குறித்த அனைத்துலக கண்ணோட்டங்கள், மலேசிய பள்ளிப் பாடத்திட்டம் அடைந்து வரும் மாற்றங்கள், மாற்றங்களை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

பட்டறையில் பங்கேற்ற ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்

அதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில் கணினிமைச் சிந்தனை குறித்து கலந்துரையாடப்பட்டது. கணினிமைச் சிந்தனை கருத்துருவாக்கம் அதன் செயல்பாட்டு வரைமுறை,  கணினிமைச் சிந்தனையும் தொழில்நுட்ட கருவிகளும், கணினிமைச் சிந்தனையில் உள்ள கலைச்சொற்கள், பாடத் திட்டத்தில் கணினிமைச் சிந்தனைக் குறித்து இந்த அமர்வில் விரிவாகப் பேசப்பட்டது.

இரண்டாம் கட்ட மலேசிய கல்விச் செந்தரமும் (SKPMg2) 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலும் என்ற தலைப்பில் மூன்றாவது அமர்வு இடம்பெற்றது . இரண்டாம் கட்ட மலேசிய கல்விச் செந்தரத்தில் ஆசிரியர்களின் பங்கு, கற்றலும் கற்றலுக்கான உதவிகளும், 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறை, ஆர்வமுடன் கற்கும் மாணவரும் அதற்கான துணைக்கருவிகளும் குறித்து இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பிரதிநிதித்து அதன் மாணவர் சேர்க்கை பிரிவின் துணை இயக்குநர் கருணா

இடப்பெற்ற எல்லா அமர்வுகளிலும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். பட்டறையின் நிறைவு விழாவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பிரதிநிதித்து அதன் மாணவர்  சேர்க்கை பிரிவின் துணை இயக்குநர் கருணா வருகையளித்து உரையாற்றினார். அதில், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களின் வளர்ச்சி மீது கொண்டுள்ள கடப்பாடு குறித்து விளக்கினார். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சி உந்து சக்தியாக இருக்கும் என அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் கருணாமூர்த்தி சுப்பிரமணியம்

இறுதியாக கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் கருணாமூர்த்தி சுப்பிரமணியம் நிரையுரையாற்றினார். அவர் தனது உரையில், ஆசிரியர்களிடையே ஏற்படும் காலத்திற்கேற்ற மாற்றங்கள் சமுதாயத்தில் மிகப் பெரும் புரட்சியைக் கொண்டு வரும் என வலியுறுத்தினார். ஆசிரியர்கள் தொடர்ந்து மாற்றங்களுக்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்தி ஆளுமை பெறுவதன் அவசியம் குறித்தும் அவரது உரை அமைந்திருந்தது.

மாலை 5.00 மணிக்கு இப்பட்டறை நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.