Home கலை உலகம் 3-வது நாளாக துபாய் சவக்கிடங்கில் ஸ்ரீதேவியின் நல்லுடல் – விசாரணை தொடர்கிறது!

3-வது நாளாக துபாய் சவக்கிடங்கில் ஸ்ரீதேவியின் நல்லுடல் – விசாரணை தொடர்கிறது!

1420
0
SHARE
Ad

துபாய் – கடந்த சனிக்கிழமை துபாய் ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் தங்கும்விடுதியில், மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல், 3-வது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை துபாய் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கிறது.

நேற்று திங்கட்கிழமை வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் சோதனை அறிக்கையின் படி, ஸ்ரீதேவி குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என்றும், அவரது உடலில் ஆல்கஹால் படிமங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், துபாய் காவல்துறை இவ்வழக்கை, துபாய் அரசு தரப்பு வழக்கறிஞரின் விசாரணைக்கு அனுப்பியிருக்கிறது.

#TamilSchoolmychoice

துபாய் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு, ஸ்ரீதேவியின் மரணத்தில் இதுவரை கிடைத்திருக்கும் தகவலில் திருப்தி இல்லையென்பதால், அவர் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதனால் தான் ஸ்ரீதேவியின் நல்லுடல் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதில் தாமதம் நிலவி வருகின்றது.

ஸ்ரீதேவி குளியலறைத் தொட்டியில் விழுந்து மூழ்கியது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை உறுதி செய்யவே துபாய் அரசுத் தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தி வருகின்றார்.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

உறவினரின் திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், ஸ்ரீதேவியை தங்கும்விடுதியில் விட்டுவிட்டு போனி கபூர் மட்டும் மும்பை சென்றது ஏன்? பின்னர் துபாய்க்கு மீண்டும் வந்தது ஏன்? என்ற கோணத்தில் துபாய் காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

ஒருவேளை, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தி ஏற்படவில்லை என்றால், மீண்டும் ஒரு பிரேதப் பரிசோதனை செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் துபாயின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான காலீஜ் டைம்ஸ் கூறுகின்றது.

இதனிடையே, மும்பையில் ஸ்ரீதேவியின் உறவினர் அனில் கபூரின் வீட்டிற்கு வந்து முன்னணி இந்திய சினிமா நட்சத்திரங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து ரஜினி, கமல், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் மும்பையிலேயே நேற்று முதல் தங்கி இருக்கின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஸ்ரீதேவியின் நல்லுடல், இந்தியாவிற்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.