மும்பை – ஒரே நாளில் எதிர்பாராதவிதமாக நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு பலவித சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதேவியின் மரணம் குறித்த விசாரணைகளை துபாய் காவல் துறையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீதேவியின் கணவரும் விசாரணையில் இணைந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
துபாயின் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (பப்ளிக் பிராசிகியூட்டர்) ஸ்ரீதேவியின் மரணம் குறித்த அறிக்கைகளில் இன்னும் முழுமையான திருப்தியையும், ஒப்புதலையும் தெரிவிக்கவில்லை.
ஸ்ரீதேவியின் மரணத்தில் எழுந்தருளியிருக்கும் சந்தேகங்களை – மர்மங்களை கீழ்க்காணுமாறு ஊடகங்கள் பட்டியலிட்டிருக்கின்றன:
- முதலில் மாரடைப்பு எனக் கூறப்பட்டு பின்னர் எதிர்பாராத விபத்தினால், குளியலறையில் மூழ்கி இறந்தார் என மாற்றப்பட்டது ஏன்?
- 5 அடி 7 அங்குல உயரமும் ஆஜானுபாகுவான உருவமும் கொண்ட ஸ்ரீதேவி இரண்டு அடி ஆழமுள்ள குளியலறைத் தொட்டியில் மூழ்கி இறந்தது என அறிக்கை தெரிவிப்பது எப்படி?
- போனி கபூர் ஸ்ரீதேவியைத் தனியே விட்டுவிட்டு மும்பை திரும்பியது ஏன்? பின்னர் மீண்டும் துபாய் வந்தது ஏன்? இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தனவா?
- ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனையில் மதுபானம் அருந்தியதற்கான தடயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீதேவியின் நெருக்கமான நபர்களில் ஒருவரான சமஜ்வாடி கட்சித் தலைவர் அமார் சிங் ஸ்ரீதேவி தனக்குத் தெரிந்து எந்தவித மதுபானமும் அருந்தியதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக பிரேத பரிசோதனை அறிக்கை மீது கேள்விகளை எழுப்பியிருக்கிறார் அமார் சிங்.
- சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தங்கும் விடுதி பணியாளரிடம் (ரூம் சர்வீஸ்) தொலைபேசியில் அழைத்து ஒரு மினரல் வாட்டர் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவி. 10.45 மணிக்கு ஸ்ரீதேவியின் அறைக்கதவைத் தட்டிய பணியாளர் கதவு திறக்காததைக் கண்டு மற்றொரு பணியாளரை அழைத்திருக்கிறார். இரவு 11.00 மணிக்கு அறைக்கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து பார்த்தபோது, ஸ்ரீதேவி குளியலறையில் தரையில் விழுந்து கிடந்திருக்கிறார். அவரது கையில் நாடித் துடிப்பு அப்போது இருந்ததாக பணியாளர் கூறியிருக்கிறார்.
- மேற்கண்ட தகவல்களின் மூலம் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அந்த நேரத்தில் அறையில் இருந்தாரா, இல்லையா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
- பிரேத பரிசோதனை அறிக்கையில் “drowning” என்ற வார்த்தை “drawning” என தவறுதலாக பதிவிடப்பட்டுள்ளது.
- பிரேத பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கும் அதிகாரி உண்மையிலேயே பிரேத பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட அதிகாரம் படைத்தவர்தானா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் ஸ்ரீதேவி குறித்த பிரேத பரிசோதனை மற்றும் காவல் துறை அறிக்கைகளில் திருப்தி கொள்ளாத துபாய் அரசாங்க வழக்கறிஞர் ஸ்ரீதேவியின் நல்லுடலை மும்பை அனுப்ப இன்னும் கையெழுத்திடவில்லை என்பதால் நல்லுடல் இன்னும் துபாயிலேயே இருந்து வருகிறது.
-செல்லியல் தொகுப்பு