கேமரன் மலை – நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் (26, 27 பிப்ரவரி) இரு நாட்களுக்கு கேமரன் மலைக்கு வருகை தந்து அங்குள்ள அரசியல் நிலைமையை நேரடியாகக் கண்டறிவதோடு, பிரச்சாரக் கூட்டங்களிலும் ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் கலந்து கொள்வதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் ஏற்கனவே இருந்து வரும் அரசியல் வெப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் கம்போங் ராஜாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிம் கிட் சியாங் இன்று காலை ரிங்லெட் பகுதிக்கு வருகை தருகிறார்.
அதன் பின்னர் ஓராங் அஸ்லி எனப்படும் பூர்வ குடியினரின் வசிப்பிடத்திற்கு வருகை தருகிறார் லிம் கிட் சியாங். இந்த சுற்றுப் பயணங்களின்போது ஜசெக சார்பில் கேமரன் மலையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் எம்.மனோகரன், லிம் கிட் சியாங்குடன் இந்தச் சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தீவிரமாக கேமரன் மலையில் பிரச்சாரம் செய்து வரும் மனோகரன், ஜசெக சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கேமரன் மலையில் நிறுத்தப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய, பரபரப்பாகப் பேசப்படும் தொகுதியாக கேமரன் மலை உருவெடுத்துள்ளது.
இந்த இரண்டு நாட்களும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை நேரடியாகப் பார்வையிட்டு, கள ஆய்வு செய்வதன் மூலம் கேமரன் மலையில் ஜசெகவின் வெற்றி வாய்ப்புகளையும் லிம் கிட் சியாங் உறுதி செய்வார் என ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் முடிவில் கேமரன் மலைக்கான ஜசெக வேட்பாளரின் பெயரை லிம் கிட் சியாங் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கடந்த 2013 பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை எதிர்த்து ஜசெக சார்பில் கேமரன் மலையில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.மனோகரன் 462 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மீண்டும் அவரே கடந்த சில மாதங்களாக இங்கே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், கேமரன் மலை எங்களுக்கே என வலியுறுத்தி வரும் மஇகாவின் சார்பில் அக்கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் தொகுதி ஒருங்கிணைப்பாளராக அங்கு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தொடர்ந்து கேமரன் மலையில் நான்தான் போட்டியிடுவேன் என்றும் இறுதி முடிவைப் பிரதமர் செய்வார் என்றும் அறிவித்து வருகிறார்.