Home நாடு “நடந்ததை மறப்போம்” – கமுந்திங்கில் முன்னாள் ஐஎஸ்ஏ கைதிகளுடன் மகாதீர்!

“நடந்ததை மறப்போம்” – கமுந்திங்கில் முன்னாள் ஐஎஸ்ஏ கைதிகளுடன் மகாதீர்!

1009
0
SHARE
Ad
தைப்பிங்கில் நடைபெற்ற பக்காத்தான் பிரச்சாரக் கூட்டத்தில் மகாதீர்

தைப்பிங் – பேராக் மாநிலத்தின் தைப்பிங் நகர் என்றதும் மலேசியர்களின் நினைவுக்கு வருவது கமுந்திங் தடுப்புக் காவல் முகாம்தான். இங்குதான் ஐஎஸ்ஏ எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கைதிகள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கடுமையான முறையில் பல தடவைகள் தனது 22 ஆண்டுகால ஆட்சியில் பயன்படுத்தியவர் மகாதீர்.

நேற்று பேராக் மாநிலத்திற்கு வருகை தந்த மகாதீர் பக்காத்தான் கூட்டணிக்கான பிரச்சாரத்தை முடுக்கி விட்ட வேளையில், கமுந்திங்கில் நடைபெற்ற அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல பக்காத்தான் தலைவர்கள் மகாதீரின் தலைமைத்துவத்தில் இதே கமுந்திங்கில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுப்புக் காவலை அனுபவித்தவர்கள் என்பதுதான் நேற்றைய நிகழ்ச்சியின் உணர்ச்சிகரமான தருணமாகும்.

தைப்பிங் பக்காத்தான் கூட்டத்தில் மொகிதின் உரையாற்றுகிறார்
#TamilSchoolmychoice

இருப்பினும், அந்தக் கடந்த கால கசப்புகளை மறந்து விட்டு குழுமியிருந்த அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டக் கைதிகள் மகாதீருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவரே அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவும் ஒரு மனதாக முழங்கினர்.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமனா கட்சியின் தலைவர் முகமட் சாபு, சமூகப் போராளி ஹிஷாமுடின் ராயிஸ் ஆகியோர் மகாதீர் ஆட்சிக் காலத்தில் கமுந்திங்கில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வாசம் அனுபவித்திருக்கின்றனர்.

இன்று மகாதீருடன் கைகோர்த்திருக்கும் அன்வார் இப்ராகிமும் இதே கமுந்திங்கில் இரண்டு வருடம் சிறை வாசம் அனுபவித்தவர்தான். அந்த காலகட்டத்தில் மகாதீர் கல்வி அமைச்சராக இருந்தார். துன் ரசாக் பிரதமராக இருந்தார்.

நேற்றைய கமுந்திங் கூட்டத்தில் உரையாற்றிய பிகேஆர் கட்சித் தலைவரும் அன்வாரின் மனைவியுமான வான் அசிசாவும், அன்வார் தன்னிடம் தனது கமுந்திங் சிறைவாசத்தைப் பற்றி நிறைய சம்பவங்களைக் கூறியிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

அன்வார் மனதுக்குள் பழிவாங்கும் எண்ணம் கொண்டிருக்காதவர் என்றும் கூறிய வான் அசிசா, அதனால்தான் மகாதீர் மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்றும் கூறினார்.

“உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது எங்களின் போராட்டங்கள் எல்லாம் பதவிகளை அடைவதற்காக அல்ல மாறாக நாட்டின் எதிர்காலத்திற்காக நடந்தவற்றை மறந்துவிட்டு நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம்” என்றும் வான் அசிசா கூறினார்.

ஜிஎஸ்டி இல்லாத மகாதீர் ஆட்சி

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய லிம் குவான் எங், மகாதீர் புதிதாக எதையும் அனுபவிப்பதற்காக பிரதமராக வர விரும்பவில்லை. மாறாக நாட்டை சீர்திருத்துவதற்காகத்தான் வந்திருக்கின்றார். பக்காத்தான் வென்றால் ஜிஎஸ்டி இல்லாத மகாதீர் கால ஆட்சி முறைக்குத் நாடு திரும்பும் எனவும் லிம் குவான் எங் உறுதியளித்தார்.

தேசிய முன்னணியை மட்டும் நாங்கள் ஒழிக்க விரும்பவில்லை – மாறாக ஜிஎஸ்டியையும் ஒழிக்க விரும்புகிறோம் என லிம் குவான்  தனதுரையில் சூளுரைத்தார்.