இஸ்தான்புல் – துருக்கியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரான ஹுசைன் பாசாரானின் மகள் மினாவும், அவரது நண்பர்களும் சென்ற தனியார் விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்.
ஹுசைன் பாசாரானுக்குச் சொந்தமான அவ்விமானத்தில் மினாவுடன் அவர்கள் நண்பர்கள் 7 பேரும், 3 விமானப் பணியாளர்களும் சென்றனர்.
அடுத்த மாதம் மினாவுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, தனது நண்பர்களுக்காக மினா, கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் கலந்து கொண்ட பின்னர், அனைவரும் துருக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
டிராப்சான்பர் காற்பந்து கிளப்பின் முன்னாள் துணைத் தலைவரான பாசாரான், மின்சக்தி துறை சார்ந்த தொழிலதிபர் ஆவார். பஹ்ரைன் மத்தியக் கிழக்கு வங்கியில் பாசாரானின் நிறுவனங்களில் ஒன்று பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டிருக்கிறது.
தனது மகளின் பெயரில் ‘மினா டவர்ஸ்’ என்ற பல ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் பாசாரான் கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.