Home நாடு சமூக ஊடகங்களில் தெறிக்க விடப்படும் ஞானராஜா

சமூக ஊடகங்களில் தெறிக்க விடப்படும் ஞானராஜா

1619
0
SHARE
Ad
இடது புகைப்படத்தில் வோங் சுன் வாய்-யுடன் (இடது கோடி) – வலது புகைப்படத்தில் லிம் குவான் எங்குடன் ஞானராஜா

கோலாலம்பூர் – கடந்த சில வாரங்களாக மலேசியா முழுவதும் ஊடகங்கள் வழியாகப் பிரபலமான பெயர் டத்தோஸ்ரீ ஞானராஜா. மலேசியக் கலையுலகத்தின் பிரபலங்களில் ஒருவரான கீதாஞ்சலியின் கணவர்.

பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஞானராஜா 150,000 ரிங்கிட் பிணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11-ஆம் தேதி  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும், ஞானராஜா இன்னும் சமூக ஊடகங்களின் நாயகனாக உலா வந்து கொண்டிருக்கின்றார். ஞானராஜாவுடன் பினாங்கு முதல்வர் எடுத்துக் கொண்டதாகப் புகைப்படம் ஒன்று இணையத் தளங்களில் வெளியிடப்பட, அதற்காக லிம் குவான் எங் முன்வந்து தன்னைத் தற்காக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

பினாங்கு முதல்வர் என்ற முறையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகவும், அப்போதெல்லாம் தன்னுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதாகவும், அதற்காக தனக்கும் தன்னுடன் புகைப்படத்தில் இருக்கும் நபருக்கும் தொடர்பிருப்பதாக கட்டுக் கதைகளைப் பரப்புவது முறையற்றது என்றும் லிம் குவான் எங் சாடியிருந்தார்.

லிம் குவான் எங் ஞானராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்டார் இணைய ஊடகமும் செய்தியோடு வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டார் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ வோங் சுன் வாய் அதே ஞானராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

உடனடியாக, வோங் சுன் வாய் இன்று தனது பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

“ஸ்டார் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்ற முறையிலும், பத்திரிக்கையாளன் என்ற முறையிலும் நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் பலர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விழைகின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை எனக்கு நேரடியாகத் தெரியாது. அந்த வகையில் லிம் குவான் எங் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் நபரையும் (அதாவது ஞானராஜா) எனக்குத் தெரியாது” என அவர் தனது அறிக்கையில் விளக்கம் தந்துள்ளார்.

“இது ஒரு பொது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம் என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஸ்டார் குழுமம் ஏற்பாடு செய்த நிலச் சொத்து மீதான விருதுகள் விழாவில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் இரண்டு பேருக்கும் கூடுதலாக இருக்கின்றனர் என்பதிலிருந்து இது ஒரு பொது நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் புரியும். அத்துடன் அந்தப் புகைப்படத்தில் நான் காலணியும் அணிந்திருக்கிறேன்” என்றும் வோங் சுன் வாய் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

காரணம், லிம் குவான் எங் ஞானராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒரு வீட்டில் எடுக்கப்பட்டது என்பதோடு அந்தப் புகைப்படத்தில் லிம் குவான் எங் காலணிகள் இன்றி, வெறும் காலுறையோடு (சொக்ஸ்) காணப்படுகிறார்.

பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் ஞானராஜா குறித்த சர்ச்சைகள் நீடித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு புறத்தில் அவர் பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சர்ச்சைகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன.