Home நாடு ஹிண்ட்ராப்-மகாதீர் கலந்துரையாடல் – வாக்குவாதத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது

ஹிண்ட்ராப்-மகாதீர் கலந்துரையாடல் – வாக்குவாதத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது

1042
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை கோலாலம்பூரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற துன் மகாதீர் – ஹிண்ட்ராப் இடையிலான கலந்துரையாடலும், கேள்வி பதில் அங்கமும், சில சச்சரவுகள், வாக்குவாதங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கன்றன.

இந்தக் கலந்துரையாடலில் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியும் கலந்து கொண்டார்.

துன் மகாதீரிடம் கேள்வி கேட்க விரும்புபவர்கள் முன்கூட்டியே தங்களின் கேள்விகளைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

எனினும் கேள்வி பதில் அங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு பங்கேற்பாளர் எழுந்து துன் மகாதீரிடம் மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனையில் நீங்கள் ஏன் தலையிடவில்லை என கேள்வி எழுப்பினார். ஆனால் இந்தக் கேள்வி முன்கூட்டியே சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே, ஹிண்ட்ராப் சார்பில் ஒருவர் இடைமறித்து இந்த கலந்துரையாடல் ஒரு சிலர் தங்களின் சொந்தப் பிரச்சனைகளைப் பேசுவதற்கான இடமல்ல எனக் கூற, அதைத் தொடர்ந்து கூக்குரல்களும், வாக்குவாதங்களும், சச்சரவுகளும் எழுந்தன.

ஏற்பாட்டாளர்களும் கலந்துரையாடலும் கேள்வி பதில் அங்கமும் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.

ஒருசிலர் இந்த முடிவு நியாயமற்றது என முழக்கமிட்டனர்.

எனினும், மகாதீர் தொடர்ந்து மேலும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பதாகக் கூறினார். கூடுதலாக 3 கேள்விகளுக்கு மகாதீர் பதிலளித்த பின்னர் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பலர் இந்திய சமுதாயம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு மகாதீர் விரிவாக பதிலளித்தார்.

எழுந்த சலசலப்பு, சச்சரவு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது “பரவாயில்லை. இதெல்லாம் எனக்குப் பழகி விட்டது” என்று மட்டும் மகாதீர் பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.