பக்காத்தான் கூட்டணியின் வியூகப் பங்காளியாக இணைந்துள்ள ஹிண்ட்ராப் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வந்திருந்தவர்களில் பலர் மகாதீரின் பதவிக் காலத்தில் ஏன் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் – மகாதீர்தான் அதற்குக் காரணமா – மகாதீர்தான் எதுவும் இந்தியர்களுக்காக செய்யவில்லை – என்பது போன்ற தொனியிலான கேள்விகளைத் தொடுத்தனர்.
மஇகாவின் பல கோரிக்கைகளைத் தனது நிர்வாகம் நிறைவேற்றிக் கொடுத்தது என்றாலும் அனைத்து கோரிக்கைகளையும் தங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதையும் மகாதீர் ஒப்புக் கொண்டார்.
“எனவே, நான் இந்தியர்களுக்காக எதையும் செய்யவில்லை எனக் கூறுவது நியாயமில்லாத ஒன்று” என்றும் மகாதீர் தன்னைத் தற்காத்தார்.
அதே வேளையில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் என்று குறிப்பிட்டு பெயர் குறிப்பிடாமல் சில தாக்குதல்களையும் மகாதீர் தொடுத்தார்.
முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவைத்தான் அவ்வாறு பெயர் குறிப்பிடாமல் மகாதீர் சுட்டிக் காட்டினார் என நம்பப்படுகிறது.
அத்தகைய தலைவர் மீது நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – கட்சியை அவ்வாறு நடத்தியதற்கு ஏன் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை – என்று கேட்கப்பட்டதற்கு மஇகாவின் உட்கட்சி விவகாரங்களிலும், பூசல்களிலும் தலையிடுவதற்கு தனக்கு உரிமையில்லை என்றும் மகாதீர் தெரிவித்தார்.
“உதாரணமாக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருக்கும் பிகேஆர், ஜசெக இரு கட்சிகளிலும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தேசிய முன்னணியிலோ மஇகா மட்டும்தான் இருக்கிறது. எனது காலத்தில் அந்த சிறப்புத் தலைவர் மட்டும்தான் இருந்தார்” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
இதே கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று துன் மகாதீருடனான கேள்வி-பதில் அங்கம் முன்கூட்டியே அனுமதிக்கப்படாத கேள்விகள் கேட்கப்பட்டதால் பாதியில் முடிவடைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.