இலண்டன் – பிரிட்டனின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ரஷியா அரசாங்க சார்பு துறையினரால் விஷமிட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரிட்டனுக்கும், ரஷியாவுக்கும் இடையில் ஏற்பட்ட தூதரக அளவிலான உறவுகள் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று பிரிட்டிஷ் அரசாங்கம் 23 ரஷிய தூதர அதிகாரிகளை பிரிட்டனிலிருந்து வெளியேற்றுவதாகவும் அவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிப்படைந்தன.
பிரிட்டனில் உள்ள ரஷிய சொத்துகளையும், உடமைகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் பிரிட்டனின் நடவடிக்கை குறித்து கருத்துரைத்த ரஷியா, இந்த நடவடிக்கை நியாயமில்லாதது என்றும், முரண்பாடானது என்றும் சாடியுள்ளது.
ரஷியாவும் விரைவில் தனது பதில் நடவடிக்கையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.