கோலாலம்பூர் – சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ், ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிடம் மன்னிப்புக் கேட்டதாக இன்று வியாழக்கிழமை ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.
நஸ்ரி எதற்காக மன்னிப்புக் கேட்டார்? என்பது தெரியவில்லை என்ற போதிலும், அரசியலில் தலையிட வேண்டாம் என கடந்த 2015-ம் ஆண்டு ஜோகூர் இளவரசரை, நஸ்ரி விமர்சித்திருந்த காரணத்திற்காக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கடந்த 2015-ம் ஆண்டு, அரசு சாரா அமைப்புகள் நடத்திய பொது விவாதம் ஒன்றில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக ஜோகூர் இளவரசர், நஜிப்பை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஜோகூர் இளவரசருக்கு எதிராகக் கருத்துக் கூறிய நஸ்ரி அசிஸ், “ஒதுங்கியிருங்கள்! இல்லாவிட்டால் நாங்கள் பதிலடி தருவோம்” என்ற தொனியில் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, அனைவரையும் கட்டுப்படுத்த “நஸ்ரி ஒன்றும் கடவுள் இல்லை” என ஜோகூர் இளவரசர், நஸ்ரிக்குப் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி (JOHOR Southern Tigers)