Home நாடு “எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்” – எஸ்பிஎம் மாணவர்களுக்கு டாக்டர் சுப்ரா வாழ்த்து

“எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்” – எஸ்பிஎம் மாணவர்களுக்கு டாக்டர் சுப்ரா வாழ்த்து

1187
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“எஸ்பிஎம் தேர்வுகளில் வெற்றியடைய இரவு பகல் பாராமல் கடுமையாகப் பாடுபட்ட மாணவர்களுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் தங்களைக் கண்காணித்து வழிகாட்டிய பெற்றோர்களுக்கும், பாடங்களை சிறப்பான முறையில் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் தருணமும் இதுவே ஆகும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் உழைப்பும் பங்களிப்பும் இல்லாமல் கல்வித் துறையில் மாணவர்கள் மிகப் பெரிய வெற்றிகளை அடைய முடியாது என்பதைக் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள்” என்றும் டாக்டர் சுப்ரா இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்தார்.

எஸ்பிஎம் தேர்ச்சி என்பது ஒரு மாணவனின் கல்விப் பாதையில் மிகவும் முக்கியம்தான் என்றாலும், கல்வியைப் பொறுத்தவரை இந்தத் தேர்ச்சி என்பது ஒரு நுழைவாயில் போன்றதுதான் என்றும் கூறிய டாக்டர் சுப்ரா,  இதனைக் கொண்டு அடுத்த கட்டமாகப் பொருத்தமான உயர் கல்வியையும், பட்டப் படிப்பையும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் – அதிலும் தேர்ச்சியடைவதன் மூலம் – வாழ்க்கையை  சிறப்பாக அவர்கள் செம்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

#TamilSchoolmychoice

“எனவே எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறுமையுடனும், நிறைய அளவில் ஆலோசனைகளைப் பெற்றும், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மூத்த மாணவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல்களைப் பெற்றும் தங்களின் அடுத்த கட்ட உயர்கல்வியை முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தற்போது கல்வித் துறையிலும், பல்கலைக் கழக நிலைகளிலும் நிறைய வாய்ப்புகள் இருப்பதால், வழக்கமான துறைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல், வளமான எதிர்காலத்தைத் தரக் கூடிய மாற்று கல்வித் துறைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தனது அறிக்கையில் டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

“அதே வேளையில் எஸ்பிஎம் தேர்வுகளில் எதிர்பார்த்த தேர்ச்சிகளைப் பெறாத மாணவர்கள் – வெற்றியின் இலக்கை அடைய முடியாத மாணவர்கள் – சோர்ந்து விடாமல் தொடர்ந்து தங்களின் வாழ்க்கையில் அடுத்த கட்ட இலக்கை நோக்கித் துணிவுடனும் மன உறுதியுடனும் செயல்பட வேண்டும். குறிப்பாக இத்தகைய மாணவர்களை மனதில் வைத்துத்தான் அரசாங்கமும் பல்வேறு கைத்திறன் பயிற்சிகளையும், தொழில் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. இத்தகைய தொழில் திறன் பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் எஸ்பிஎம் தேர்வுகளில் எதிர்பார்த்த தேர்ச்சியைப் பெறாத மாணவர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்க்கையில் கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேற முடியும்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.