மதுரை – தேனி மாவட்டம் குரங்கனி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவத்தில் சிக்கிக் கொண்டவர்களின் மரண எண்ணிக்கை இன்று வியாழக்கிழமையுடன் 14-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11-ஆம் தேதி ஏற்பட்ட குரங்கனி காட்டுத் தீயில், அப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த மாணவ, மாணவிகள் உட்பட 39 பேர் சிக்கிக் கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் உள்ளூர்வாசிகளின் உதவியோடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்திய விமானப் படையும் தீயை அணைப்பதிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டது.
இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
சம்பவம் நடந்த அன்று 8 பேர் மரணமடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதன் பின்னர் கடுமையான தீக்காயங்களுக்கு இலக்காகியவர்கள், அபாய கட்டத்தில் இருந்தவர்கள் சிலர் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர்.
இன்றுடன், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.