Home நாடு “தெலுங்கு மக்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது” டாக்டர் சுப்ரா உகாதி வாழ்த்து

“தெலுங்கு மக்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது” டாக்டர் சுப்ரா உகாதி வாழ்த்து

935
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று உகாதி பண்டிகையைக் கொண்டாடும்  அனைத்து மலேசியத் தெலுங்கு வம்சாவளியினருக்கும் தனது இனிய உகாதி தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இவ்வாண்டு உகாதி பண்டிகையை அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் கொண்டாடவும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய மண்ணில் வாழ்ந்தாலும் தெலுங்கு வம்சாவளி மக்கள், தங்களுடைய புத்தாண்டு நாளாகிய உகாதி திருநாளை ஒற்றுமையோடு கொண்டாடுகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும் என உகாதி தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

“மலேசிய இந்தியர்கள் என்று வரும்போது நாம் அனைவரும், இன, மத பேதமின்றி இந்த நாட்டில் நமது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடி வருகிறோம். அந்த வகையில், மஇகாவிலும் தொடக்க காலம் முதல் அரசியல் ரீதியாக தெலுங்கு மக்களின் பங்களிப்பும், சேவைகளும், உழைப்பும், அவர்கள் தந்து வரும் ஆதரவும் என்றும் நினைவுகூரத்தக்கதாகும். இன்றும் ஏராளமான தெலுங்கு வம்சாவளியினர் மஇகாவில் பல நிலைகளில் பொறுப்புகளில் பங்காற்றி வருகிறார்கள். தெலுங்கு வம்சாவளியினரின் பல்வேறு கோரிக்கைகளுக்கும் மஇகாவும் தொடர்ந்து ஆதரவு தந்து வருவதோடு, அரசாங்கமும் தெலுங்கு சமூகத்தினரின் தேவைகள், கோரிக்கைகளுக்கு ஏற்பவும், மலேசிய தெலுங்கு சங்கத்தின் முயற்சிகளுக்கு துணை நிற்கும் வகையிலும் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளையும், வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது” என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த இணக்கமான சூழல் தொடர அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

“பன்மொழி பேசும் மக்கள் வாழும் மலேசியாவில் மொழி நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இந்தியர்கள் விளங்குகின்றனர் என்றால் அது மிகையாகாது. இத்தகைய ஒற்றுமை, மலேசியாவில் தொடர்ந்து வரும் காலங்களிலும் தழைத்தோங்க வேண்டும் என்பதோடு இந்தத் தெலுங்கு புத்தாண்டானது நாம் அனைவரும் ஒரே குரலாக ஒலித்து ஒரே இலக்கை அடையும் ஆண்டாக அமைவது மட்டுமின்றி, மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாகவும், வளத்தையும், நலத்தையும் வெற்றியையும் தரும் ஆண்டாகவும் விளங்க வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.