Home நாடு லாபிஸ் ஜசெக-ஹிண்ட்ராப் பிரச்சாரக் கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி

லாபிஸ் ஜசெக-ஹிண்ட்ராப் பிரச்சாரக் கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி

831
0
SHARE
Ad
சா’ஆ பிரச்சாரக் கூட்டத்தில் வேதமூர்த்தி, பி.இராமசாமி, இராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆதரவாளர்கள்

லாபிஸ் – ஜோகூர் மாநிலத்திலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில், சா’ஆ வட்டாரத்தில் நேற்று ஜசெக-ஹிண்ட்ராப் இணைந்து நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு குழுவினர் புகுந்து கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்ததோடு, அந்தக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் முற்பட்டனர்.

அதைத் தொடர்ந்து காவல் துறையினர் தலையிட்டு, கூட்டத்தை நிறுத்த அறிவுறுத்தினர். எனினும் ஹிண்ட்ராப் தலைவர்களும், அந்த இயக்கத்தின் வழக்கறிஞரும் காவல் துறையினருடன் வாதாடி, தாங்கள் கூட்டத்திற்கான முறையான அனுமதி பெற்று நடத்துவதாகக் கூறி, தொடர்ந்து கூட்டத்தை நடத்தினர்.

பி.வேதமூர்த்தி

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, ஹிண்ட்ராப் தேசியத் தலைவர் பி.வேதமூர்த்தி, லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் லாபிஸ் தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட இராமகிருஷ்ணன் தேசிய முன்னணி வேட்பாளர் சுவா தி யோங்கிடம் 353 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் இராமகிருஷ்ணன் மீண்டும் லாபிஸ் தொகுதியில் ஜசெக சார்பில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் நேற்றையக் கூட்டத்தில் கலந்து கொண்டு கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தவர்களின் பின்னணியில் தேசிய முன்னணிதான் செயல்பட்டது என ஹிண்ட்ராப் குற்றம் சாட்டியிருக்கிறது.

இராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வென்ற லாபிஸ் போன்ற தொகுதிகளில் ஹிண்ட்ராப்பின் பிரச்சாரத்தால் இந்த முறை தோல்வியடைந்து விடுவோம் என தேசிய முன்னணி அஞ்சுகிறது என்றும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் வேதமூர்த்தி குற்றம் சாட்டினார்.

காவல் துறையினர் நிகழ்ச்சியை நிறுத்த அறிவுறுத்திய போதிலும், தொடர்ந்து நேற்றைய கூட்டத்தில் வேதமூர்த்தி தனது உரையை நிகழ்த்தினார்.

கடந்த புதன்கிழமை மார்ச் 14-ஆம் தேதி துன் மகாதீருடன் ஹிண்ட்ராப் ஏற்பாட்டிலான கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்திய வேதமூர்த்தி தனது குடும்பத்திற்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.