Home நாடு மகாதீர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக வேதமூர்த்திக்கு மிரட்டல்

மகாதீர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக வேதமூர்த்திக்கு மிரட்டல்

873
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை மார்ச் 14-ஆம் தேதி “துன் மகாதீருடன் ஒரு மாலை” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஹிண்ட்ராப் சார்பில் ஏற்பாடு செய்ததற்காக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி குடும்பத்தினருக்கு எதிராகத் தொலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, வேதமூர்த்தி நெகிரி செம்பிலான் மம்பாவ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் செய்துள்ளார். எனினும் எந்த மாதிரியான மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தை வேதமூர்த்தி வழங்கவில்லை. “அந்த மிரட்டலின் உள்ளடக்கம் மனதைச் சஞ்சலபடுத்தும் என்பதால் அதுகுறித்துப் புகாரில் தெரிவிக்க நான் விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.

அந்தக் காவல் துறை புகாரின்படி, வியாழக்கிழமை அதிகாலை 2.37 மணியளவில் ஹிண்ட்ராப் உறுப்பினர் ஒருவருக்கு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பில் வேதமூர்த்தி குடும்பத்துக்கு பாதகம் ஏற்படுத்தப்படும் என்ற மிரட்டல் விடுக்கப்பட்டது. சுமார் 45 வினாடிகள் இந்த மிரட்டல் நீடித்தது.

#TamilSchoolmychoice

மகாதீருடனான ஹிண்ட்ராப் நிகழ்ச்சி முடிவடைந்து சுமார் 4 மணி நேரத்தில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மிரட்டல் அரசியல் ரீதியான ஒன்று என்றும் பக்காத்தானுடனான தனது அரசியல் கூட்டணியைக் குறிவைத்து நிர்மூலமாக்க அரசாங்கம் மற்றும் தேசிய முன்னணி பிரதிநிதிகளைக் கொண்டு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தனது புகாரில் வேதமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றிரவே தனக்கும் இரண்டு தொலைபேசி அழைப்புகள் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வந்ததாகவும் எனினும் அவை மிரட்டல் அழைப்புகள் எனத் தான் கருதியதால் அந்த அழைப்பிற்கு பதிலளித்துப் பேசவில்லை என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பல மிரட்டல்கள் தனக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

“ஆகஸ்ட் 2017-இல் மகாதீரைச் சந்தித்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு அவருக்கு நான் ஆதரவைத் தெரிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, நான் எனது அலுவலகத்தில் தாக்கப்பட்டேன். இப்போது மகாதீருடனான நிகழ்ச்சி முடிந்து சில மணி நேரங்களிலேயே நான் மீண்டும் மிரட்டப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்த வேதமூர்த்தி இந்த மிரட்டலை தான் சாதாரணமாகக் கருதவில்லை என்றும் தனது புகாரில் கூறியிருக்கிறார்.