தெம்பே அரிசோனா / சான் பிரான்சிஸ்கோ – உலகமே தானியங்கி ரோபோ கார்களை இயக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அரிசோனாவில் சோதனை முயற்சியில் இருந்த தானியங்கி ஊபர் கார் மோதியதில் பெண் ஒருவர் பலியாகியிருப்பது, அத்தொழில்நுட்ப வளர்ச்சியைக் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.
உலக அளவில் ரோபோ கார்களை உருவாக்குவதில் முன்னிலையில் இருக்கும் ஊபர், ஆல்பாபெட் இன்க், ஜெனரல் மோட்டார்ஸ் சோ ஆகிய நிறுவனங்கள், ரோபோ கார்களை இயக்குவதன் மூலம் மனிதத் தவறுகள் குறைந்து விபத்துகளைக் கட்டுப்படுத்தலாம் என்ற பிரச்சாரத்தின் அடிப்படையில், ரோபோ கார்களை உருவாக்கி, உலகம் முழுவதும் அறிமுகம் செய்து, மிகப் பெரிய லாபம் ஈட்டத் தயாராகி வருகின்றன.
ஆனால், நேற்று திங்கட்கிழமை நடந்திருக்கும் ரோபோ கார் விபத்தால் ஏற்பட்டிருக்கும் முதல் பலி, நிஜ உலகில் மனிதர்கள் மத்தியில் ரோபோ கார்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றது.
எலைன் ஹெர்ஸ்பெர்க் (வயது 49) என்ற பெண், தெம்பே பகுதியில் தனது மிதிவண்டியுடன், நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வந்த தானியங்கி ஊபர் கார் ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.
தற்போது இவ்விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஊபர் நிறுவனம் தானியங்கி கார்களின் சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது.