Home நாடு அரசு மருத்துவமனைகளில் ‘ஹெபடைட்டிஸ் சி’ சிகிச்சை இலவசம்!

அரசு மருத்துவமனைகளில் ‘ஹெபடைட்டிஸ் சி’ சிகிச்சை இலவசம்!

899
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மற்ற நாடுகளில் பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அதிக செலவாகும் ஹெபடைட்டிஸ் சி (கல்லீரல் தொற்று) சிகிச்சையை மலேசிய அரசாங்க மருத்துவமனைகள் இலவசமாக வழங்கவிருக்கின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டார்.

சோஃபோஸ்புவிர் (sofosbuvir) என்ற புதிய மருந்து, மலேசியாவில் முதற்கட்டமாக 2,000 ஹெபடைட்டிஸ் சி நோயாளிகளுக்கு வழங்கப்படவிருக்கிறது என்றும், அம்மருந்து ஹெபடைட்டிஸ் சி தொற்று வைரசை அழித்து வியாதியைப் போக்குகிறது என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த வகை சிகிச்சை, 95 விழுக்காடு வியாதியைக் குணப்படுத்துகிறது என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

தற்போது, சுகாதார அமைச்சின் கீழ், இயங்கி வரும் அரசாங்க மருத்துவமனைகளில், இரண்டு வாரங்களுக்கும் மேலாக, சுமார் 20 நோயாளிகள் அம்மருந்தினைப் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றார்கள்.

சுகாதார அமைச்சில் பதிவாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில், சுமார் 23,000-க்கும் அதிகமான ஹெபடைட்டிஸ் சி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஹெபடைட்டிஸ் சி என்பது கல்லீரலைத் தாக்கும் ஒருவகை வைரசால் ஏற்படும் வியாதியாகும். நிறைய பேர் எந்த ஒரு அறிகுறியும் இன்றி இத்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

இந்நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், கல்லீரல் தொற்று முற்றி கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற நிலை ஏற்படும் என்றும் சுகாதார அமைச்சு கூறுகின்றது.

மலேசியாவில் ஏறக்குறைய 5 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் சி தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என்றும், ஆனால் அது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் என்றும் அண்மைய ஆய்வு கூறுகின்றது.

எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஹெபடைட்டிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.